ஜம்மு-காஷ்மீரில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் சிஆர்பிஃஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தற்கொலை படைத்தாக்குதல் நசடத்தினர். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஃஎப்  வீர மரணம் அடைந்நதனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

இதைதொடர்ந்து, ஜமாத்-உத்-தவா தீவிரவாத இயக்கம் மற்றும் பலாக்-ஐ-இன்சானியட் அறக்கட்டளை ஆகிய 2 அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு சமீபத்தில் தடை விதித்துள்ளது. இந்த அமைப்புகளின் வங்கி கணக்குகளும், அசையாச் சொத்துக்களும் முடக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 44 பேரை பாகிஸ்தான் அரசு அதிரடியாக கைது செய்தது. இதில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரின் சகோதரன் முப்தி அப்துர் ராப், அவரது மகன் ஹமாத் அசாரும் கைதாகி சிறையில் இருந்து வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் அவ்வப்போது தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று ஜம்மு-காஷ்மீரில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. பேருந்து நிலையத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. பேருந்தில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குண்டுவெடித்ததையடுத்து பேருந்து நிலையத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பேருந்து நிலையம் கடைகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.