Black money

கருப்பு பணத்தை பதுக்க ஸ்டேட் வங்கியில் 2 ஆயிரம் புதிய கணக்குகள்…சி.பி.ஐ. விசாரணையில் கண்டுபிடிப்பு

நாட்டில் ரூபாய் நோட்டு தடை ெசய்யப்பட்டதில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிவரை உத்தரப்பிரதேசம், ரேபரேலி நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் 2 ஆயிரம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கணக்குகள் மூலம் ரூ. 8கோடி வரை செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட்செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அடையாளம் தெரியாத வங்கி அதிகாரிகள், அடையாளம் தெரியாத நபர்கள் பெயரில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

உத்தரப்பிரதேசம், ரேபரேலி நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், சந்தேகத்துக்கு இடமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. அமைப்புக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, ஜனவரி 2-ந்தேதி ரேபரேலி ஸ்டேட் வங்கியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கடந்த 2016, நவம்பர் 8-ந்தேதிக்கு பின், டிசம்பர் 31-ந்தேதிவரையில், மிகப் பெரிய அளவில் வங்கிக்கணக்குகளில் பணம் டெபாசிட்செய்யப்பட்டு இருப்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். நவம்பர் 8-ந்தேதிமுதல், டிசம்பர் 31-ந்தேதி வரை ஏறக்குறைய 2,441 வங்கிக்கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் 667 சேமிப்பு கணக்குகள், 53 நடப்பு கணக்குகள், 94 ஜன்தன் வங்கிக்கணக்குகள், 50 பி.பி.எப். கணக்குகள், 1,518 வைப்புக்கணக்குகள், 13 பண்டிகை கால கணக்குகள், 2 மூத்த குடிமக்களுக்கான கணக்குகள், ஒரு அரசு சார்பில் கணக்கு எனத் தெரியவந்தது. மேலும, 794 முறை ரூ. ஒரு லட்சத்துக்கு மேல் வங்கிக்கணக்குகளில்டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. சில நேரங்களில் மிகப்பெரிய அளவில் பணம் செய்யப்பட்டுள்ளது ஆனால், அதன்மதிப்பை சி.பி.ஐ. வெளியிட வில்லை.

இந்த வங்கிக்கணக்குகள் அனைத்தும் வங்கி அதிகாரிகள் மூலமாக தொடங்கப்பட்டுள்ளன. தனிநபர்கள், பெரும் தொழிலதிபர்கள் தங்களிடம் உள்ள கருப்புபணத்தை வெள்ளையாக மாற்ற இந்த வங்கிக்கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 2016,நவம்பர் 8-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரையிலான காலத்தில் இந்த வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தின் எண்ணிக்கை, ரூ.500,ரூ.1000 நோட்டுகள் எத்தனை என்பது குறித்த விவரங்களும் போலியாக இருப்பதாக சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.