ஏழை மக்களின் ‘ஜன் தன்’ கணக்குகளில் கருப்புப் பணம் டெபாசிட் செய்தவர்களை ஜெயிலுக்குப் அனுப்புவது உறுதி என்று பிரதமர் நரேந்திர மோடி சபதம் ஏற்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
ஏழை மக்கள் வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்காக, மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு புதிய திட்டம் ஒன்றை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது.
‘ஜன்தன்’ வங்கிக் கணக்கு
அதன்படி ஒரு ரூபாய் கூட ஆரம்ப ‘டெபாசிட்’ தேவை இல்லாமல் ஏழைகளுக்கு ‘ஜன் தன்’ என்ற பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இதன்படி நாடு முழுவதும் ஏறத்தாழ 40 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டன.

கடந்த நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பு வரும்வரை இந்த கணக்குகளில் ரூ.40 ஆயிரம் ேகாடி (சராசரியாக தலா ரூ. 1000)தான் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், மோடியின் அறிவிப்பை தொடர்ந்து, இந்த டெபாசிட் தொகை இரட்டிப்பாக உயர்ந்தது. ஜன்தன் கணக்குகளில் வசதி படைத்தவர்கள் தங்கள் கருப்புப் பணத்தை டெபாசிட் செய்ததால், இந்த திடீர் உயர்வு ஏற்பட்டது.
தேர்தல் பிரசாரம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத்தில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இது குறித்து கூறியதாவது-
‘‘ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், அதில் டெபாசிட் செய்யப்பட்ட கருப்புப் பணத்தை திருப்பிக் கொடுக்காதீர்கள். திருப்பித்தருவதாக வாக்குறுதி அளித்து இருந்தாலும் திருப்பிக் கொடுக்க வேண்டாம்.
ஜெயிலுக்கு....
அந்தப் பணத்தை சட்ட விரோதமாக உங்கள் கணக்கில் டெபாசிட் செய்தவர்களை ஜெயிலுக்கு அனுப்புவதற்கான வழிமுறைகளை வகுப்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். அந்தப் பணம் ஏழைகளின் வீட்டிற்குச் செல்லும் என உறுதி அளிக்கிறேன்.
பணம் படைத்த ஊழல்வாதிகள் இத்தனை ஆண்டுகளாக மக்களின் பணத்தை கொள்ளையடித்து வந்தனர். நீண்ட நேரம் கியூவில் காத்து நிற்கும் நாட்டு மக்களுக்கு தலைவணங்குகிறேன்.

நேர்மையானவர்கள்தான் பணத்தை டெபாசிட் செய்வதற்காக வங்கிக்கு வெளியே வரிசையில் காத்து நிற்கிறார்கள். ஆனால், ஜன்தன் கணக்கில் டெபாசிட் ெசய்வதற்காக ஊழல்வாதிகள் ஏழைகளின் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள்.
50 நாட்களில்..
ெபாது மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்கள் வெகு விரைவில் நீங்கிவிடும். 50 நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்று அரசு ஏற்கனவே அளித்த வாக்குறுதியை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தற்போது நாட்டில் 40 கோடி ஸ்மார்ட் போன்கள் உள்ளன. மொபைல் வங்கி முறையில் அனைத்து பொருட்களையும் வாங்க முடியும். 40 கோடி மக்களுக்கு வங்கிகளுக்குச் செல்லாமலேயே, கியூவில் நிற்காமலேயே அனைத்தையும் பெற முடியும்.

வறுமை ஒழிப்பு
வறுமையை நாட்டில் இருந்து ஒழிக்கவேண்டும். பெரிய மாநிலங்களான உ.பி., பீகார், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற பெரிய மாநிலங்களில் இருந்து வறுமையை முதலில் ஒழிக்க வேண்டும்.
மத்திய பிரதேச மாநிலம் பின் தங்கிய மாநிலமாக கருதப்பட்டு வந்தது. ஆனால், அந்த மாநில மக்கள் பா.ஜனதாவுக்கு ஒரு வாய்ப்பு அளித்ததால், சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் அங்கு பதவி ஏற்ற அரசு மாற்றத்தை கொண்டு வந்தது. இன்று அந்த மாநிலம் ஒளிரும் திறமைக்கு உதாரணமாக விளங்குகிறது’‘.
இவ்வாறு மோடி கூறினார்.
‘நான் ஒரு துறவி; எனக்கு தலைமை யாரும் இல்லை’
ரூபாய் நோட்டு விவகாரத்தில் தன்னை குற்றவாளி என்று எதிர்க்கட்சியினர் வேட்டையாடுவதாக கூறிய பிரதமர் மோடி, ஊழல் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிரான போரை ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்றும் சூளுரைத்தார். அவர் மேலும் கூறியதாவது-
‘‘ஊழலுக்கு எதிராக போர் தொடுத்தமைக்காக என்னை குற்றவாளி என்கிறார்கள்... ஆனால், அவர்களால் என்னை என்ன செய்துவிட முடியும்?... நான் ஒரு துறவி. என்னுடைய சிறிய உடைமைகளுடன் எந்த நேரத்திலும் வெளியேற முடியும்.
எனக்கு என்று தலைவரோ அல்லது தலைமையோ யாரும் கிடையாது. நாட்டில் உள்ள 125 கோடி மக்களாகிய நீங்கள்தான் என் தலைவர். ஊழல் என்பது தானாக இந்த நாட்டை விட்டு வெளியேறாது. அதை நாம்தான் துடைத்தெறிய வேண்டும்’‘.
இவ்வாறு அவர் கூறினார்.
‘இதுவே கடைசி கியூ’
பிரதமர் மோடி பேசுகையில், வங்கிகள் முன்பு இந்த கியூவில் மக்கள் காத்திருப்பது பற்றி கூக்குரல் எழுப்பும் அரசியல் தலைவர்களுக்குப் பதில் அளித்தார்.
அப்போது அவர், ‘‘நாடு சுதந்திரம் அடைந்தபின் கடந்த 70 ஆண்டுகளாக இந்த நாட்டையே கியூவில் காக்க வைத்தார்கள். சர்க்கரை, மண் எண்ணெய், அரிசி, கோதுமைக்காக மக்கள் நீண்ட கியூவில் நின்றனர்.
ஆனால், இப்போது நிற்பதுதான் கடைசி கியூவாக இருக்கும்... (இப்படி மோடி கூறியபோது கூட்டத்தினர் கரவொலி எழுப்பினார்கள்). விரைவில் உங்கள் சிரமங்கள் அனைத்தும் நீங்கிவிடும்’’ என்றார்.
