முந்தைய 2014 - 2019 வரையிலான மோடி அரசில் மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்தவர் அருண் ஜெட்லி . உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்த அவர்  பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்து வந்தார் . 

மாநிலங்களவை உறுப்பினரான அருண் ஜெட்லீ சமீபத்தில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற மோடி அமைச்சரவையில் உடல்நிலையை காரணம் காட்டி இணைய விருப்பமில்லை என்று கூறியிருந்தார் . இந்த நிலையில் கடந்த 9 ம் தேதி  உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 66 வயதான அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது.

பிரதமர் , அமைச்சர்கள் மற்றும்  பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சென்று சந்தித்தனர். இதனிடையே  இன்று 12.08 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வாஜ்பாய் மரணம் அடைந்து இருந்தார் . அதன் பிறகு உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மார்ச் மாதம் உயிரிழந்தார் . இந்த மாதம் 6 ம் தேதி முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார் .

இவர்களை தொடர்ந்து தற்போது அருண் ஜெட்லியும் மறைந்திருப்பது பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது ,