கொரோனா தடுப்பு மருந்தை யாருக்கு முதலில் கொடுப்பது என்ற தேர்வு, காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதை போன்ற எளிதான காரியம் அல்ல என்று, ராகுல் காந்திக்கு பாஜகவை சேர்ந்த டாக்டர் விஜய் சௌதய்வாலே பதிலடி கொடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்திய அரசு முனைப்பு காட்டிவரும் நிலையில், கொரோனா தடுப்பு மருந்து இந்திய மக்கள் அனைவருக்கும் எப்படி கொண்டு சேர்க்கப்படும் என்பது குறித்த 4 கேள்விகளை எழுப்பிய ராகுல் காந்தி, அந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று டுவிட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார்.

1. கொரோனா தடுப்பூசி வேட்பாளர்களில் இந்திய அரசு எதை தேர்வு செய்யும்? ஏன்?

2. யாருக்கு கொரோனா தடுப்பூசி முதலில் கிடைக்கும்? விநியோக திட்டம் என்ன?

3. பிரதமர் கேர்ஸ் நிதி இலவச தடுப்பு மருந்து கொடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பது உறுதி செய்யப்படுமா?

4. அனைத்து இந்தியர்களுக்கும் எப்போது தடுப்பு மருந்து கொடுத்து முடிக்கப்படும்?

அதற்கு பதிலளித்த டாக்டர் விஜய் சௌதய்வாலே, அன்பிற்குரிய மிஸ்டர் ராகுல் காந்தி அவர்களே, தடுப்பு மருந்து யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற தேர்வு, காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதை போன்ற எளிதான காரியம் அல்ல. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு, தகுதியை எல்லாம் கருத்தில்கொள்ளாமல் நேரு குடும்பத்தினரை எளிதாக தேர்வு செய்வதை போல இது எளிதல்ல. நீங்கள் உங்கள் விடுமுறையை கோவாவில் என்ஜாய் பண்ணுங்க.. உங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து குறித்து புரிந்துகொள்வது ரொம்ப  கஷ்டம் என்று பதிலளித்து ராகுல் காந்தியின் மூக்கை உடைத்துள்ளார்.