பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பிரதமர் மோடி: ஷெஹ்சாத் பூனாவாலா புகழாரம்!
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாக பாஜக புகழாரம் சூடியுள்ளது
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.100 குறைத்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சுதா மூர்த்தி ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறித்தும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாக பாஜக புகழாரம் சூடியுள்ளது.
பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெண்களை பிரதான நீரோட்டத்திற்கு பிரதமர் மோடி கொண்டு வருவதாகவும், இது ஏழைகளின் முன்னேற்றத்திற்கு முக்கியமான நடவடிக்கை என்றார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது நாட்டு மக்களுக்கு பயனுள்ள முக்கியமான படியாகும் எனவும் அவர் கூறினார்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் கிடைக்கும் மானியம் ரூ.300 ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெண்கள் அவர்களது அன்றாட வரவு-செலவில் நிவாரணம் பெற வேண்டும் என்ற ஆசையை நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார் என ஷெஹ்சாத் பூனாவாலா கூறினார். கொரோனா தொற்று போன்ற உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் போதும், உஜ்வாலா திட்டத்தின் மானியத்தை மோடி தொடர்ந்ததாகவும் அவர் கூறினார்.
மத்தியில் ஆளும் மோடி அரசு, மத்திய அரசின் கலால் வரியைக் குறைத்ததாலும், பாஜக மாநில அரசுகள் வாட் வரியைக் குறைத்ததாலும், பாஜக ஆளும் மாநில மக்களுக்கு பெட்ரோல் டீசல் குறைந்த விலையில் கிடைப்பதாக பூனாவாலா கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அனைத்து திட்டங்களும் பெண்களை மையமாக வைத்து வடிவமைக்கப்படும் என்று பூனாவாலா கூறினார். உஜ்வாலா யோஜனா, பேட்டி பச்சாவ் யோஜனா, போஷன் யோஜனா, லட்லி லக்ஷ்மி யோஜனா, சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகிய அனைத்தும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க எடுக்கப்பட்ட முடிவுகள் என அவர் சுட்டிக்காட்டினார்.
கருப்பை வாய் புற்றுநோய்: விழுப்புரத்தில் எச்.பி.வி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் முத்தலாக் என்ற பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்று ஷெஹ்சாத் பூனாவாலா கூறினார். இதன் மூலம், முஸ்லிம் சகோதரிகளின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற அவர், பெண்களுக்காக போராடுவேன் என்று கூறிய பிரியங்கா காந்தி, சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து இன்னும் பேசாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியை விமர்சித்த பூனாவாலா, பிரதமர் மோடி இப்போது செய்து வருவதைப் போல, கடந்த 70 ஆண்டுகளாக பெண்களின் பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் ஏன் முன்னுரிமை கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். பெண்களின் அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.