2023-24 நிதியாண்டில் காங்கிரசை விட பாஜக 6 மடங்கு அதிகமாக நன்கொடைகளை பெற்றுள்ளது. அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

BJP received donations of rs.2,243 crore: இந்தியாவில் உள்ள பிரபலமான அரசியல் கட்சிகள் பல்வேறு தொழில் அதிபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து நன்கொடைகள் பெற்று வருவது வழக்கம். அந்த வகையில் 2023-24 நிதியாண்டில் பாஜக அதிகபட்சமாக ரூ.2,243 கோடி நன்கொடைகளைப் பெற்றுள்ளதாக தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கை தெரிவித்துள்ளது.

தேசிய கட்சிகளின் நன்கொடைகள்

தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஒரு அறிக்கையின்படி, தேசிய கட்சிகள் 2023–24ல் ரூ.2,544.28 கோடியாக நன்கொடைகள் பெற்றுள்ளன. மொத்தம் 12,547 நன்கொடைகளில் இருந்து இந்த தொகை வந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 199% அதிகம் ஆகும். பாஜக அதிகப்பட்சமாக ரூ.2,243.94 நன்கொடைகளை பெற்றுள்ளது. இது மொத்த நன்கொடைகளில் 88% ஆகும்.

பாஜக ரூ.2,243.94 கோடி நன்கொடை 

பாஜகவுக்கு நன்கொடைகள் 2022-23 நிதியாண்டில் ரூ.719.858 கோடியிலிருந்து 2023-24 நிதியாண்டில் ரூ.2,243.94 கோடியாக அதிகரித்து, 211.72 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல், காங்கிரசுக்கு நன்கொடைகள் 2022-23 நிதியாண்டில் ரூ.79.924 கோடியிலிருந்து 2023-24 நிதியாண்டில் ரூ.281.48 கோடியாக உயர்ந்துள்ளது. இது 252.18 சதவீதம் அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என்று ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

ஆம் ஆத்மி எவ்வளவு?

ஆம் ஆத்மி கட்சி நன்கொடைகள் 70.18 சதவீதம் அல்லது ரூ.26.038 கோடி குறைந்துள்ளது. NPEP அறிவித்த நன்கொடைகள் 98.02 சதவீதம் அல்லது ரூ.7.331 கோடி குறைந்துள்ளது. இந்த நன்கொடைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க இந்திய தேர்தல் ஆணையம் செப்டம்பர் 30, 2024 என காலக்கெடு நிர்ணயம் செய்திருந்தது. 

இதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் ஆணையம் அறிவித்த நாளில் அறிக்கையை சமர்ப்பித்தன. பாஜக 42 நாட்கள் தாமதத்துடன் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. மேலும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் 20 நாட்களுக்கு மேலான தாமதத்துக்கு பிறகே அறிக்கையை சமர்ப்பித்தன.

மொத்த நன்கொடை என்ன?

2023–24 நிதியாண்டில் தேசிய கட்சிகள் பெருநிறுவன மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து 3,755 நன்கொடைகளைப் பெற்றன. இது மொத்தம் ரூ.2,262.55 கோடி. இது அனைத்து நன்கொடைகளிலும் 88.92 சதவீதமாகும். இதற்கு நேர்மாறாக 8,493 தனிநபர் நன்கொடையாளர்கள் ரூ.270.87 கோடியை வழங்கியுள்ளனர், இது மொத்த நன்கொடையில் 10.64 சதவீதமாகும்.

பாஜக, காங்கிரஸ் 

இவற்றில் பாஜக 3,478 நிறுவன நன்கொடைகளைப் பெற்றது. இது ரூ.2,064.58 கோடியாகும். கூடுதலாக, அதே காலகட்டத்தில் 4,628 தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து ரூ.169.13 கோடியைப் பெற்றது. காங்கிரசை பொறுத்தவரை 2023-24 நிதியாண்டில் கார்ப்பரேட்/வணிகத் துறைகளிலிருந்து 102 நன்கொடைகள் மூலம் மொத்தம் ரூ.190.3263 கோடியையும், 1,882 தனிநபர் நன்கொடையாளர்கள் மூலம் ரூ.90.899 கோடியையும் பெற்றுள்ளது. காங்கிரசை விட பாஜக 6 மடங்கு நன்கொடை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.