Asianet News TamilAsianet News Tamil

தெலங்கானாவில் ஓவைசியை பின்னுக்கு தள்ளிய பாஜக!

தெலங்கானா மாநிலத்தில் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியை பாஜக பின்னுக்கு தள்ளியுள்ளது

BJP pushed back Asaduddin Owaisi AIMIM in Telangana smp
Author
First Published Dec 3, 2023, 5:36 PM IST

தெலங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் உருவானது முதல் நடைபெற்ற இரு தேர்தல்களில் வெற்றி பெற்ற பிஆர்எஸ் கட்சி இந்த முறை மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சி பின்னடைவை சந்தித்ததுடன், அம்மாநிலத்தின் அசைக்க முடியாத சக்தியாக பார்க்கப்பட்ட கே.சந்திரசேகர் ராவ் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க அம்மாநிலத்தில் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியை பாஜக பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தெலங்கானாவில் 64 தொகுதிகளில் காங்கிரஸும், பிஆர்எஸ் 40 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 119 இடங்களில், பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகிய கட்சிகள் தலா 7 இடங்களில் வென்றன. ஆளும் பிஆர்எஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை பாஜக 7 இடங்களில் அதிகமாக முன்னிலையில் உள்ளது. ஏஐஎம்ஐஎம் கட்சி அதே நிலையிலேயே உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க இந்த முறை பாஜக அதிக முனைப்பு காட்டியது. முந்தைய தேர்தல்களில் பாஜகவின் வாக்கு வங்கி குறைவாக இருந்தாலும், அம்மாநிலத்தில் அக்கட்சி கணிசமாக வளர்ந்து வருவதே இதற்கு காரணமாக கூறப்பட்டது. 2019ஆம் ஆண்டில் அக்கட்சியால் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் முதல்வரின் மகளைத் தோற்கடிக்க முடிந்தது. 2020 ஆம் ஆண்டில், கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் பாஜகவின் வெற்றி அபரிமிதமானது.

நல்லாட்சியில் இந்திய மக்கள் நம்பிக்கை: பிரதமர் மோடி!

இந்த வெற்றிகள் தந்த உத்வேகத்தில் இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் அல்லது பிரதான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என திட்டமிட்டு பாஜக முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அக்கட்சி 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதுவும் அக்கட்சிக்கு வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் செல்வாக்கு மிக்கவராக ஒவைசி அறியப்படுகிறார். ஆனால், அவரது கட்சியைவிட பாஜக அதிக வாக்குகள் பெற்றுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பாஜகவின் பி டீமாக அறியப்படுகிறார். அவர் பாஜகவின் பி டீம் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. இருப்பினும், அவரது கட்சியை பாஜக பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios