கர்நாடகாவில் பழங்குடியின் பெண் நிர்வாணமாக தாக்குதல்: விசாரணை குழு அமைத்த பாஜக!
கர்நாடகாவில் பழங்குடியின் பெண் நிர்வாணமாக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை பாஜக அமைத்துள்ளது
கர்நாடக மாநிலம் பெல்காமில் பழங்குடியின பெண் ஒருவர், அவரது வீட்டில் இருந்து தரதரவென வெளியே இழுத்து வரப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் மகன், ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி தெரியவந்ததும் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் அந்த இளைஞரின் வீட்டுக்கு சென்று அவரது தாயாரை இதுபோன்று தாக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அப்பெண் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கொடூர குற்றங்கள் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து கர்நாடகாவில் அடிக்கடி நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வராக பாஜகவின் பஜன்லால் ஷர்மா பதவியேற்பு!
மேலும், இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஐந்து நபர் கொண்ட கமிட்டி ஒன்றையும் அமைத்து ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். அக்குழுவில் பாஜக பெண் எம்.பி.க்கள் அபரஜிதா சாரங்கி, சுனிதா துகல், லாக்கெட் சாட்டர்ஜி, ரஞ்சிதா கோலி ஆகியோரும், பாஜக தேசிய செயலாளர் அஷா லக்ராவும் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, இந்த சம்பவம் பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், “பெலகாமில் மட்டுமின்றி, எல்லா இடங்களிலும் இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எங்களது அரசு எடுத்து வருகிறது. எந்த குற்றமாக இருந்தாலும், குற்றம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். பெலகாவி சம்பவம் மிகவும் கொடூரமானது. கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தொடர்புடைய சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்கச் செய்வது எங்களது கடமை, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
“குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட ஏழு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு சென்று நேரடியாக சந்திக்க உள்ளேன்.” என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.