ராஜஸ்தான் முதல்வராக பாஜகவின் பஜன்லால் ஷர்மா பதவியேற்பு!
ராஜஸ்தான் முதல்வராக பாஜக எம்.எல்.ஏ. பஜன்லால் ஷர்மா பதவியேற்றுள்ளார். துணை முதல்வர்கள் இருவரும் பதவியேற்றுள்ளனர்
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை மொத்தம் 200 தொகுதிகளை கொண்டது. வேட்பாளர் ஒருவரின் மறைவை அடுத்து 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதில் பதிவான வாக்குகள் கடந்த 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தேர்தலில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்தி பாஜக அமோக வெற்றி பெற்றது. பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 69 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 12ஆம் தேதி மத்திய அமைச்சரும், மேலிட பார்வையாளருமான ராஜ்நாத் சிங் முன்னிலையில் நடைபெற்றது. அதில், முதல்முறை எம்.எல்.ஏ.வான பஜன்லால் சிங் பாஜக சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல், துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் வாசுதேவ் தேவ்நானி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, ராஜஸ்தான் முதல்வராக பாஜகவின் பஜன்லால் ஷர்மா 15ஆம் தேதி (இன்று) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஜெய்ப்பூரின் ராம்நிவாஸ் பாக்கில் உள்ள ஆல்பர்ட் ஹாலில் நடைபெற்ற விழாவில் ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும், துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 7ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், தெலங்கானா, மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலங்கானாவில் காங்கிரஸும், மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றது.
இதையடுத்து, தெலங்கானா முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டியும், மிசோரம் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமாவும் பதவியேற்றனர். மத்தியப் பிரதேச முதல்வராக பாஜகவின் மோகன் யாதவும், சத்தீஸ்கர் மாநில முதல்வராக பாஜகவின் விஷ்ணு தியோ சாய் ஆகியோரும் பதவியேற்ற நிலையில், ராஜஸ்தான் முதல்வராக பாஜகவின் பஜன்லால் ஷர்மா பதவியேற்றுக் கொண்டுள்ளார்.