கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 3 பேர் மட்டுமே கலந்துகொள்ளாததால் குமாரசாமி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இதனால், காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதள தலைவர்கள் நிம்மதி அடைந்தனர். 

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசை கவிழ்க்கும் முயற்சியில் தொடர்ந்து பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. சில மத்திய அமைச்சர்களே இதில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். காங்கிரஸில் பதவி இழந்த ரமேஷ் ஜார்க்கோலியை வைத்து பாஜக ஸ்கெட்ச் போடத் தொடங்கியது. 

காங்கிரஸிலிருந்து 15 எம்.எல்.ஏ.க்களை வெளியேற வைத்து ராஜினாமா செய்ய திட்டம் போடப்பட்டது. 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜக வசம் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. கூட்டணி அரசை ஆதரித்துவந்த 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் திடீரென அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர்.  இதனால் கட்சி எம்எல்ஏக்களை தக்க வைக்க காங்கிரஸும் களத்தில் குதித்தது. 

இதன் ஒரு பகுதியாக சட்டப்பேரவை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நேற்று பெங்களூருவில் கூட்டியது. கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் என எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக எச்சரித்தனர். நேற்று கூடிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மொத்தம் உள்ள 80 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 75 பேர் கலந்துகொண்டனர். சபாநாயகர் நீங்கலாக 4 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்கவில்லை. உமேஷ் யாதவ் என்ற எம்.எல்.ஏ. உடல்நிலையை காரணம் காட்டி, கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கடிதம் அனுப்பியிருந்தார். 

கூட்டத்தில்  ரமேஷ் ஜார்க்கோலி, உமேஷ் குமட்டாலி, பி.நாகேந்திரா ஆகியோர் மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்கவில்லை. இதனால், இந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 எம்.எல்.ஏ.க்கள் தேவை. தற்போது காங்கிரஸைச் சேர்ந்த 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தவிர்த்தாலும், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு 116 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை என்பதால், இரு கட்சித் தலைவர்களும்  நிம்மதியடைந்துள்ளனர்.