நான்காம் கட்டத் தேர்தல் நாளை (ஏப்.29) நடைபெற உள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலம் பராக்பூர் தொகுதியில் வாக்கு இயந்திரத்தில் பாஜக என்ற பெயர் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. 
மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 77 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பராக்பூர் தொகுதியும் ஒன்று. இந்தத் தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ள தாமரை சின்னத்தின் கீழே கட்சியின் பெயர் பி.ஜே.பி. என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரத்தில் இப்படி எந்தக் கட்சியின் பெயரும் இடம் பெறாது. ஆனால், பிஜேபி பெயர் இடம் பெற்றது பிற அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பைக் கிளப்பியது. 
மின்னணு வாக்கு இயந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பி.ஜே.பி. என்ற பெயரை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதுதொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன. நாளை  தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்கு இயந்திரத்திலிருந்து இந்தப் பெயர் எப்படி நீக்கப்படும் என்று தெரியவில்லை.
இதற்கிடையே வாக்கு இயந்திரங்களில் பாஜக சின்னத்துடன் பிஜேபி என்ற பெயர் இடம்பெற்றிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.