BJP MP Suresh Gopi evaded road tax claims report

கேரள நடிகை அமலாபால், நடிகர் பகத் பாசில் புதுச்சேரியில் காரை பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்தாக செய்திகள் வெளியான நிலையில், நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சுரேஷ்கோபியும் இந்த விவகாரத்தில் சிக்க உள்ளார். 

பிரபல நடிகை அமலா பால் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 1.12 கோடிக்கு வாங்கிய பென்ஸ் காரை கேரளாவில் பதிவு செய்யாமல் புதுச்சேரி முகவரி கொடுத்துப் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்தார் என்ற செய்திகள் வெளியாகின.

அமலாபால் அளித்த புதுச்சேரி முகவரியில் பொறியியல் கல்லூரி மாணவர் வசித்து வருவதால், அவர் அளித்தது போலியான முகவரி எனத் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியைச் சொந்த மாநிலமாகக் கொண்ட ஒருவர் மட்டுமே புதுச்சேரியில் பதிவு செய்யமுடியும். இதனால் போலி முகவரி அளித்து ரூ20 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அமலா பால் மீது புகார் எழுந்தது.

கேரளாவில் காரின் மதிப்பில் 20 சதவிகிதத்தை சாலை வரியாக அளிக்க வேண்டும். ஆனால், புதுச்சேரியில் ரூ55 ஆயிரத்தை மட்டும் செலுத்தி அமலா பால் ரூ.20 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமலா பால் விவகாரம் குறித்து 15 நாள்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.

பகத் பாசில்

மேலும், பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் சாலை வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பென்ஸ் ஈ காரை வாங்கிய பகத், புதுச்சேரியில் பதிவு செய்ததால் ரூ. 14 லட்சம் வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளது. ரூ. 14 லட்சத்துக்குப் பதிலாக ரூ. 1.5 லட்சம் மட்டுமே சாலை வரியாக அளித்துள்ளார் என கேரள தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது.

பாஜனதா எம்.பி.

இந்நிலையில், பா.ஜனதா மாநிலங்கள்அவை எம்.பி.யும், நடிகருமான சுரேஷ் கோபியும் வரி ஏய்ப்பில் சிக்க உள்ளார். இது தொடர்பாக ‘மாத்ரூ பூமி’ தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், “ நடிகரும், எம்.பியுமான சுரேஷ் கோபி ஆடி கியூ7 வகை எஸ்.யு.வி.காரை கடந்த 2010ம் ஆண்டு புதுச்சேரி முகவரியில் வாங்கியுள்ளார். அவர் இதற்கு சாலை வரியாக ரூ.1.5 லட்சம் செலுத்தியுள்ளார். இவர் இந்த காரை கேரளாவில் பதிவு செய்து இருந்தால், சாலை வரியாக ரூ.15 லட்சம் செலுத்த வேண்டியது இருக்கும். புதுச்சேரியில் சுரேஷ் கோபி அளித்துள்ள முகவரி வாடகை வீட்டின் முகவரி என்றும் அந்த சேனல் தெரிவித்துள்ளது.