வெளிநாட்டில் இருந்து திரும்பிய பாஜக எம்.பி.யின் மகளின்  ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மனிதர்கள் மூலமாக இந்த வைரஸ் வேகமாக பரவுவதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளாதாகவும், 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 42 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால் நாடு முழுவதும் 20 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி. கிட்டேஸ்வரா. இவரது மகள் அஸ்வினி. இவர் கயானா நாட்டில் இருந்து கடந்த 21-ம் தேதி நியூயார்க், டெல்லி வழியாக பெங்களூரு திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்றிருக்கிறார். வீட்டில் இருந்த அஸ்வினி சந்தேகத்தின் பேரில் தனது ரத்த மாதிரியை பரிசோதனைக்காக கொடுத்துள்ளார். அதை பரிசோதித்ததில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது அவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தற்போது அஸ்வினி அங்குள்ள அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் உள்ள வேலைக்காரர்கள் உள்பட அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கிட்டேஸ்வரா எம்.பி.கூறுகையில்;- ‘தனது மகளுக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் அனைவரும் குடும்பத்தோடு கயானாவில் இருந்து ஊர் திரும்பியதாகவும், வீட்டுக்கு வந்தது முதல் அவர்களை தனிமைபடுத்தி வைத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.