BJP MLA Surendra Singh controversy speech
பெண் குழந்தைகளின் பெற்றோர்தான், பலாத்கார சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், பாலியா மாவட்டம், பைரியா தொகுதி எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங். பாஜகவை சேர்ந்தவரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலையில் எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங், மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள்தான் பலாத்கார சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, நாட்டில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து விட்டதற்கு பெண்குழந்தைகளின் பெற்றோர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். பெண் குழந்தைகளை சுதந்திரமாக நடமாட விடுவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நடைபெறுவதாக கூறினார்.
பெண் குழந்தைகளை முறையாகப் பார்த்துக்கொள்ளாமல், கண்காணிக்காமல் இருப்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு சிறுமிக்கோ அல்லது
சிறுவனுக்கோ 15 வயது வந்துவிட்டால், அவர்களின் நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இது பெற்றோரின் கடமையாகும். அப்படி செய்யாமல்,
சுதந்திரமாக விட்டுவிடுகிறார்கள். இதனால், பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன. குழந்தைகள் செல்போன்கள் பயன்படுத்த தரக் கூடாது என்று கூறினார். யாரேனும் 3 குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வார்களா? அது முடியாதுதானே. இதுபோன்ற குற்றச்சாட்டுதான் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் பேசும்போது, தேவையில்லாத சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி ஊடகங்களின் செய்திகளுக்கு மசாலா சேர்க்காதீர்கள் என்று அறிவுறுத்தி இருந்தார். ஆனால், அந்த அறிவுரையை பாஜகவினர் காற்றில் பறக்கவிட்டு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை நாள்தோறும் தெரிவித்து வருகின்றனர்.
