உத்தரகாண்டில் பாஜக எம்.எல்.ஏ. அறை ஒன்றில் துப்பாக்கிகளை ஏந்திய படி சினிமா பாணியில் நடனமாடியதை தொடர்ந்து அவரை கட்சி தலைமை 6 ஆண்டுகளுக்கு அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலத்தின் கான்பூர் தொகுதி எம்.எல்.ஏ பிரணவ் சாம்பியன். பல சர்ச்சைகளுக்கு பேர் போனவரான இவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில், தனது இரு கைகளில் துப்பாக்கியை வைத்து நடனமாடும் பிரணவ், ஒரு கட்டத்திற்கு மேல் வாயில் துப்பாக்கியை கவ்விக்கொண்டு ஆட்டம் போடுகிறார். மேலும், போதையில் அவரது நண்பர்களுடன் பிரணவ் கெட்ட வார்த்தைகளை மிக சரளமாக பேசுகிறார். அதுவும் வீடியோவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதனையடுத்து உத்தரகாண்ட் காவல்துறையினர் இந்த வீடியோ குறித்து விசாரித்து வந்தனர். இதனிடையே, கட்சியில் அவரை நீக்க வேண்டும் என கட்சித் தலைமைக்கு அம்மாநில பாஜக தலைவர் பரிந்துரை செய்திருந்தார். மேலும், பிரணவ் மீது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கட்சி தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், பாஜக எம்.எம்.ஏ பிரணவ் சிங்கை அக்கட்சி தலைமை 6 ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.