தாமரை ஆபரேசன் பற்றி எங்களுக்கு எந்த கவலையுமில்லை என்று கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என கூறியுள்ளார். 

கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக குமாரசாமி பதவியேற்றதில் இருந்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றார். இவர் தனது பதவியை காப்பாற்றுவதற்காக கோயில் கோயிலாக சென்று வருகிறார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் நேற்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அங்கிருந்து காரில் திருச்செந்தூர் வந்த அவர், தனது மனைவி அனிதா, மகன் நிகில் ஆகியோருடன் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெறும் மோதலால் எங்கள் ஆட்சிக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது என்று கூறினார். காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகளை சரி செய்ய, காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

 

45 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடைபெறும் பாஜகவின் தாமரை ஆபரேசன் பற்றி எங்களுக்கு எந்த கவலையுமில்லை. மஜதவின் 18 எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டதாக கூறப்படுவது வதந்தி என்று கூறினார்.