மத்தியப்பிரதேச மாநில முதல்வராக பாஜகவின் மோகன் யாதவ் பதவியேற்பு!
மத்தியப்பிரதேச மாநில முதல்வராக பாஜகவின் மோகன் யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.
மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 163 இடங்களிலும், காங்கிரஸ் 66 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம், தனிப் பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்த பாஜகவின் சட்டமன்றக் கட்சிக் கூட்டம் நேற்று முன் தினம் தலைநகர் போபாலில் நடைபெற்றது.
அதில், பாஜக சட்டமன்றக் கட்சி தலைவராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அம்மாநில ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரிய அவர், மத்தியப்பிரதேச முதல்வராக டிசம்பர் 13ஆம் தேதி (இன்று) பதவியேற்கவுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, மத்திப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அம்மாநில முதல்வராக பாஜகவின் மோகன் யாதவ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் மங்குபாய் சிங் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும், ஜக்தீஸ் தேவுடா, ராஜேந்திர சுக்லா ஆகிய இரண்டு பேர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழு 2ஆம் நாளாக ஆய்வு!
உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள உஜ்ஜைன் தக்ஷின் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் மோகன் யாதவ். 2013ஆம் ஆண்டு இதே தொகுதியில் முதன்முதலாக எம்எல்ஏவாக வெற்றி பெற்ற அவர், 2018 மற்றும் 2023ஆம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.
முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக மோகன் யாதவ் பணியாற்றியுள்ளார். மத்தியப்பிரதேச மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களான, ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர் மோகன் யாதவ். ஆர்.எஸ்.எஸ். ஆதரவை பெற்ற அவர் மீது இதுவரை எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லை.