bjp leader criticize central government

காஷ்மீரை இந்தியா உணர்வுப்பூர்வமாக இழந்துவருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் நிதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா. பாஜகவின் மூத்த தலைவரான அவர், பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் பொருளாதார நடவடிக்கைகளை விமர்சித்துவருகிறார்.

அருண்ஜேட்லியின் தவறான நடவடிக்கைகள் காரணமாக இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக யஷ்வந்த் சின்ஹா விமர்சித்தார்.

இந்நிலையில், காஷ்மீரில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. காஷ்மீரை இந்தியா உணர்வுபூர்வமாக இழந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் மக்களும் இந்திய அரசின் மீது நம்பிக்கையை இழந்துவருகின்றனர். காஷ்மீர் பிரச்னை குறித்து பிரதமரிடம் பேசுவதற்கு நான் 10 மாதங்களுக்கு முன்பே அனுமதி கேட்டிருந்தேன். ஆனால், எனக்கு இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை. அதனால், நான் மிகவும் புண்பட்டுள்ளேன். சொந்தக் கட்சியினராலேயே நான் இழிவுபடுத்தப்பட்டேன்.

இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா வருத்தம் தெரிவித்துள்ளார்.