ரஷ்யா - உக்ரைன் போருடன் ஒப்பிட்டு மம்தா அரசை விமர்சித்த பாஜக தலைவர் அக்னிமித்ரா
மேற்கு வங்க பாஜக பொதுச் செயலாளர் அக்னிமித்ரா பால், பஞ்சாயத்து தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது நடந்த வன்முறையை ரஷ்யா - உக்ரைன் இடையேயான போருடன் ஒப்பிட்டுப் பேசினார்.
பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது நிகழ்ந்த வன்முறையில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மேற்கு வங்க அரசைக் கண்டித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அக்னிமித்ரா பால், முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
புதன்கிழமை இதுகுறித்து பேசிய அக்னிமித்ரா, வேட்புமனு தாக்கலின்போது நடந்த வன்முறையை ரஷ்யா - உக்ரைன் இடையேயான போருடன் ஒப்பிட்டுப் பேசினார். மத்தியப் படைகளை அனுப்பாவிட்டால், மாநிலத்தில் இரத்தக்களரி ஏற்படும் என்றும் அவர் கூறினார். மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது தாங்கள் தாக்கப்படுவதாக பல எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
"வேட்பு மனு தாக்கல் செய்ய 5-6 நாட்கள் மட்டுமே உள்ளன. வேறு எந்த அரசியல் கட்சியுடனும் விவாதிக்கவில்லை. யாருடைய ஆலோசனையின் பேரில் பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும். ஆரம்பம் முதலே பார்த்துவருகிறோம். பாஜக மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
"டயமண்ட் ஹார்பர், ஜாய்நகர், கேனிங், காக்ட்வீப், பர்தமான் ஆகிய இடங்களில் பாஜக தலைவர்கள் இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள். வெடிகுண்டுகள் வெடிப்பதை பார்க்கிறோம். இது என்ன ரஷ்யா - உக்ரைன் சண்டையா? இங்கு போரா நடக்கிறது?" அக்னிமித்ரா கேள்வி எழுப்பினார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்குக் காரணம் முதல்வர் மம்தா பானர்ஜி தான் என்றும் அவர் உடனே பதவி விலக வேண்டும் என்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் தலைவர் அக்னிமித்ரா வலியுறுத்தியுள்ளார். "கடந்த 6-8 மாதங்களில் இவ்வளவு வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது ஏன் என்பது இப்போது புரிகிறது. இது உண்மை என்று நான் நினைக்கிறேன். மம்தா ஏதோ சொல்கிறார், பின்னால் வேறு ஏதாவது செய்கிறார்" என்றும் அக்னிமித்ரா பால் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஒரே கட்டமாக ஜூலை 8ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஜூலை 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கு வங்கத்தில் நடைபெறும் பஞ்சாயத்துத் தேர்தலில் பாஜக மற்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.