2019 நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணியை அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரம்காட்டி வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்து வருவதால் பாரதிய ஜனதா கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த முக்கிய கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளே பாஜகவுடனான உறவை முறித்து கொண்டன. அந்த வரிசையில் இப்போது பாரதிய ஜனதா-ஐக்கிய ஜனதா தளம் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் வரும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கூறியிருந்தார். 

ஆனால் கூட்டணி தேவையில்லை என்றால் பாரதிய ஜனதா தனித்து வேண்டுமானாலும் போட்டியிடும் என்று ஐக்கிய ஜனதா தளம் பகிரங்கமாக கூறியிருக்கிறது.  அண்மையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவையும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்தார். 

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களில் பாரதிய ஜனதா மேலிடம் இப்போதே ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் கூட்டணிக்குள் விரிசல் அதிகரித்துக்கொண்டே போவது பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவாக அமையும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.