மதவாத பிரச்சினையை மணிப்பூரில் கொளுத்திப் போட்ட பாஜக.. சசிகாந்த் செந்தில் சொன்ன பரபரப்பு தகவல்
பட்டியல் பழங்குடியினர் பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற மேதி சமூகத்தின் கோரிக்கைக்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கடந்த மே 3ம் தேதி வன்முறை வெடித்தது.
இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்தினருக்கும், குக்கி பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால் மணிப்பூரில் பதற்றம் நிலவுகிறது.
பட்டியல் பழங்குடியினர் பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற மேதி சமூகத்தின் கோரிக்கைக்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கடந்த மே 3ம் தேதி வன்முறை வெடித்தது. இதனால் 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட சுமார் 10,000 ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் மணிப்பூருக்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேதி மற்றும் குக்கி சமூகங்கள் அமைதியை நிலைநாட்டி இயல்பு நிலையைக் கொண்டுவரப் பாடுபடுமாறு வேண்டுகோள் விடுத்தார். மணிப்பூரில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக, இம்பால்-திமாபூர் தேசிய நெடுஞ்சாலை-2 ல் உள்ள சாலைத் தடைகளை அகற்றுமாறு அந்த சமூகங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் மணிப்பூர் விவகாரத்தை பற்றி பேசினார். “ஒட்டுமொத்த பழங்குடி மக்களையும் கிறிஸ்துவர்கள் என்று டார்கெட் செய்து இந்துத்துவாவை வளர்க்க அரசே துணை போயிருக்கிறது. இந்த விளைவு இன அழிப்பு என்ற நிலைக்கு தள்ளிவிட்டது. இது அரசின் துணையில்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை.
தற்போது ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு வந்துவிட்டனர். யார், யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொல்லும் நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர். மணிப்பூர் நடப்பதால் நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று நினைத்துவிடக் கூடாது. அங்கு நடப்பது, நாளை இங்கேயும் நடக்கலாம். மியான்மரில் இப்படித்தான் ரோஹிங்கியா முஸ்லீம்கள் என்ற இனக்குழுவே இல்லாமல் போய்விட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் கலவரத்தை உண்டு பண்ணும் அமைப்புகளை மணிப்பூரில் அரசே ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த 3ஆம் தேதி இனப் படுகொலையை ஆரம்பித்துள்ளனர். 37 ஆயிரம் பேருக்கு மேல் எந்தவித வசதியும் இன்றி காடுகளில் வசித்து வருகின்றனர். இப்படி ஒரு மோசமான நிகழ்வு நடந்து வரும் போது, புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா, செங்கோல் போன்ற விஷயங்களை வைத்து நம்மை திசை திருப்ப பார்க்கிறது பாஜக அரசு” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க..ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 150 கேமராக்கள்.! இனி பொது இடங்களில் குப்பையை கொட்டினால் அவ்வளவுதான்