பா.ஜனதாவுக்கு, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்ததைடுத்து, மாநிலங்கள் அவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியன் பலம் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே பல்வேறு மாநிலக் கட்சிகள் ஆதரவு அளித்துவரும் நிலையில், மாநிலங்கள் அவையில் பா.ஜனதா பெரும்பான்மையை நெருங்கி உள்ளது.

மக்கள் அவையில் ஆளும் பா.ஜனதா கட்சிக்கு ஆதரவு  இருந்தாலும், மாநிலங்கள் அவையில் பெரும்பான்மை இல்லை. 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்கள் அவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு 89 உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது. இதனால், பல மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜனதா கட்சி கடுமையாகப் போராடுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பா.ஜனதா ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத்திலும் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்போம் எனத் தெரிவித்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இருக்கும் 10 எம்.பி.க்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளனர். இதனால், மாநிலங்கள் அவையில், பா.ஜனதாவுக்கான ஆதரவு 99 ஆக அதிகரிக்கும்.

மேலும், ஏற்கனவே அ.தி.மு.க., பிஜூ ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஐ.என்.எல்.டி. ஆகிய கட்சிகளின் எம்.பி.க்களும் , நியமன எம்.பி.க்களின் ஆதரவும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இருக்கிறது. இதனால், பெரும்பான்மையை நெருங்கி 121 எம்.பி.க்களை தொட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், உத்தரப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்கள் அவை எம்.பி.க்கள் 8 முதல் 9 வரை தேர்வு செய்யப்பட்டால், குஜராத்தில் இருந்து 3 இடங்கள், மத்தியப்பிரதேசத்தில் இருந்து ஒரு இடம் என அனைத்தும் பா.ஜனதா வசம் வந்தால், மாநிலங்கள் அவையில் தேசியஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும்.

இதனால், நடந்து வரும் மழைக்காலக் கூட்டத்தொடர், அடுத்துவரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் ஆளும் பாஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைத்து, மசோதாக்களை எளிதாக நிறைவேற்ற முடியும்.