Meghalaya Election 2023: மேகாலயாவில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு
மேகாலயாவில் உள்ள பி.ஏ. சங்மா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி அம்மாநிலத்தில் பிப்ரவரி 24 அன்று ஷில்லாங் மற்றும் துராவில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. தெற்கு துராவில் உள்ள பிஏ சங்மா மைதானத்தில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்த பாஜக சார்பில் மாநில அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு மேகாலயா விளையாட்டுத் துறை அனுமதி மறுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரி ஸ்வப்னில் டெம்பே கூறுகையில், "கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மைதானத்தில் கட்டுமானப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அதிகமானவர்கள் கூடும்போது அது பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாக மாறக்கூடும். எனவே பெரிய அளவில் கூட்டம் கூடுவதற்கு அந்த மைதானம் பொருத்தமாக இருக்காது என விளையாட்டுத்துறை கூறியுள்ளது." எனத் தெரிவித்து உள்ளார்.
முதல்வர் கான்ராட் கே சங்மாவின் சொந்த தொகுதியான தெற்கு துராவில் பி.ஏ. சங்மா மைதானம் அமைந்துள்ளது. 127 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த மைதானத்தை முதல்வர் கான்ராட் சங்மா 2022ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி திறந்து வைத்தார்.
பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தை நடத்துவதற்கான மாற்று இடமாக அலோட்கிரே மைதானம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்டத் தேர்தல் அதிகாரி ஸ்வப்னில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு பதில் அளித்துள்ள பாஜக, ஆளும் தேசிய மக்கள் கட்சியும், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பிற எதிர்க்கட்சிகளும் சேர்ந்து பாஜக அலையைத் தடுக்க முயற்சிப்பதாகக் சாடியுள்ளது.
இதனைக் கண்டித்துள்ள பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் ரிதுராஜ் சின்ஹா, திறக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகும் மைதானம் முழுமை அடையாமல் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மாநில அரசு அனுமதி மறுத்தாலும் மக்கள் பாஜகவை ஆதரிக்க ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள் என்றும் தனது ட்விட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.
Bihar: இப்படியெல்லாமா இருப்பிங்க! பீகார் சிறையில் போலீஸ் சோதனையின்போது மொபைல் போனை மென்று தின்ற கைதி