பீகாரில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட நடிகரும் பாஜக எம்.பியுமான சத்ருகன் சின்ஹா காய் நகர்த்தி வரும் நிலையில், பாஜகவிலிருந்து விலகிவிடுங்கள் என்று பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பீகாரில் உள்ள பாட்னா சாஹிப் தொகுதியின் பாஜக எம்.பி.யாக இருப்பவர் இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவரது அணுகுமுறை மாறியது. மோடியைத் தொடர்ந்து குறை கூறியும் விமர்சனம் செய்தும் வருகிறார் சத்ருகன் சின்ஹா. இந்த முறை அவருக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. எனவே லல்லு கட்சியும் காங்கிரஸும் ஏற்படுத்தியுள்ள கூட்டணியில் சேர்ந்து போட்டியிட சத்ருகன் சின்ஹா காய் நகர்த்திவருகிறார். 

இந்நிலையில் பீகார் மாநில மூத்தத் தலைவரும் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி சத்ருகன் சின்ஹாவை கடுமையாக விமர்சித்துள்ளார். “பா.ஜ.க. தயவால் மத்திய அமைச்சராகவும், எம்பியாகவும்  இருந்த சத்ருகன் சின்ஹா பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதை ஏற்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்தும் வருகிறார். அவரது போக்கு சரியல்ல. கட்சியில் இருப்பது பிடிக்கவில்லை என்றால், கட்சியிலிருந்து விலகிக்கொள்ளட்டும்.  

கட்சிக்குள் இருந்துகொண்டே அவதூறு பேசுவதை ஏற்க முடியாது. சின்ஹாவுக்கென தனிப்பட்ட செல்வாக்கு இருந்தால், தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட தயாரா?” என்றும் கேள்வி எழுப்பினார். சத்ருகன் சின்ஹாவை கட்சியை விட்டு நீக்க ஏன் பாஜக தயங்குகிறது என்று அவரது ஆதரவாளர்கள் பீகாரில் கேள்வி எழுப்பியுள்ளனர்.