காங்கிரஸ் கட்சியின் பொது நிதி திரட்டுதல் திட்டத்தை வம்சத்துக்கான நன்கொடை என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், க்ரவுட் ஃபண்டிங் எனப்படும் பொது நிதி திரட்டும் பிரசாரமான தேசத்திற்கு நன்கொடை எனும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “இந்திய தேசிய காங்கிரஸ் தனது ஆன்லைன் க்ரவுட் ஃபண்டிங் எனும் பொது நிதி திரட்டும் பிரசாரமான ‘தேசத்திற்கு நன்கொடை’ திட்டத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த முயற்சி 1920-21ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க திலக் ஸ்வராஜ் நிதியால் ஈர்க்கப்பட்டு, சமமான வள விநியோகம் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த இந்தியாவை உருவாக்குவதில் எங்கள் கட்சிக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பிரசாரத் திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 18ஆம் தேதி டெல்லியில் தொடங்கி வைப்பார் எனவும் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான நிர்வாகிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் பிரதிநிதிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அலுவலகப் பணியாளர்கள் தலா ரூ.1,380 பங்களிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொது நிதி திரட்டும் இந்த பிரசாரத் திட்டத்தை வம்சத்துக்கான நன்கொடை என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பக்கத்தில், “தங்கள் எம்.பி.யின் பணக் கொள்ளை பிடிபட்ட நிலையில், அதீத ஆடம்பரம், பிறர் செல்வம் மற்றும் கட்டுப்பாடற்ற அதிகாரம் இல்லாமல் வாழும் ஒரு வம்சத்தின் வாழ்க்கைச் செலவுகளைத் தக்கவைக்க, வம்சத்துக்கான நன்கொடை திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வருகிறது.” என விமர்சித்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டிருந்த நாடாளுமன்ற ஊடுருவல்காரர்கள்!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. இவர் தொடர்புடைய பால்டியோ சாகு குழுமத்துக்கு மேற்கு ஒடிசாவில் பவுத் டிஸ்டிலெரி என்ற மதுபான ஆலை உள்ளது. இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஒடிசா, ஜார்க்கண்ட், மற்றும் மேற்குவங்கத்தில் பால்டியோ சாகு குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர். அப்போது அவரது தொடர்புடைய இடங்களில் இருந்த பணக்கட்டுகள் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை Money Heist என்ற வெப் சீரிஸ் உடன் தொடர்பு படுத்தி பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
