சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்க அவகாசம் கோரிய பாஜக, காங்கிரஸ்!
பிரதமர் மோடி, ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு தொடர்பாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்திடம் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அவகாசம் கோரியுள்ளன
முஸ்லிம்கள் குறித்து பேசி பிரதமர் மோடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் இந்துக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும். நமது வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உள்ளது என காங்கிரஸ் கூறி வருகிறது. அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் நாட்டின் செல்வத்தை காங்கிரஸ் பகிர்ந்தளிக்கும் என்றார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மத உணர்வுகளை தூண்டும் வகையில், வெறுப்பு பேச்சு பேசியதாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இரண்டு கட்ட தேர்தலில் ஏற்கனவே 100 இடங்களை தாண்டி விட்டோம்: அமித் ஷா!
அதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மோடி மீறிய புகாரில் பாஜக விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ராகுல் காந்தி மீதான புகார் குறித்தும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த புகாரிலும், பிரதமர் மோடி மீதான புகாரிலும் காங்கிரஸ் தலைவர் கார்கே, பாஜக தலைவர் நட்டா ஆகியோர் ஏப்ரல் 29ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு தொடர்பாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்திடம் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அவகாசம் கோரியுள்ளன. தேர்தல் விதிகளை மீறி மோடி, ராகுல் பேசியதாக எழுந்த புகாரில் தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க பாஜக ஒரு வாரம், காங்கிரஸ் 14 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளது.