முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது .
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை இராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி அகியோரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் உயிரிழந்த ஜெனரல் பிபின் ராவத் உடலுக்கு இசை அஞ்சலி, இதய அஞ்சலி, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. டெல்லி முதலமைச்சர் ஆரவிந்த் கெஜ்ரிவால், உத்ரகாண்ட முதலமைச்சர் புஷ்கர் சிங், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்,அரசியல் கட்சி தலைவர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி, அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து விமானம் வழியாக டெல்லி கொண்டுசெல்லப்பட்டது. தற்போது தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தேசியக்கொடி ஏந்தி ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலத்தில் வழிநெடுகிலும் மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். டெல்லி கன்டோன்மென்ட் மயானத்தில் இருவரின் உடல்களும் முழு ராணுவ மரியாதையுடன் சற்றுநேரத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் அவர்களது உடலுக்கு பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக டெல்லி விமானபடை தளத்தில் இருந்து பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ஆகியோரின் உடல்கள் இராணுவ வாகனத்தில் அவர்களின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவர்களது உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர், திமுக எம்.பி கனிமொழி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தற்போது இராணுவ கண்டோன்மண்டில் வைக்கபட்டுள்ள ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உடல்களுக்கு இறுதி சடங்கு அவர்களது மகள்கள் செய்தனர்.
