அர்ப்பணிப்பின் உருவமான அம்மா! ஹீராபென் மோடி வாழ்க்கை வரலாறு
பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மோடி 1923ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் விஸ்நகரில் பிறந்தார். 2022ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி காலமானார். அவரது வாழ்க்கைச் சித்திரத்தை அளிக்கும் தொகுப்பு இது.
99 வயதான தன் தாய் ஹீராபென் மோடியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, "ஒரு புகழ்மிக்க நூற்றாண்டு இறைவனின் காலடியில் இளைப்பாறுகிறது. என் தாயிடம் ஒரு துறவியின் பயணத்தையும், சுயநலம் இல்லாத கர்மயோகிக்கு உரிய அடையாளத்தையும், உயர்ந்த மதிப்பீடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையும் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்." என்று கூறியிருக்கிறார்.
1923ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தின் விஸ்நகரில் பிறந்தவர் பிரதமர் மோடியின் அம்மா ஹீராபென் மோடி. பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு மிக அருகில் உள்ள ஊர் விஸ்நகர்.
ஹீராபென் மோடி, டீக்கடை நடந்திக்கொண்டிருந்த மோடியின் தகப்பனார் தாமோதர்தாஸ் முல்சந்த் மோடியை மணந்தார்.
சிறுவயதிலேயே ஹீராபென் மோடியின் தாயார் ஸ்பானிய ஃப்ளூ பாதிப்பினால் மரணமடைந்தார். தாயை இழந்ததால் குழந்தைப் பருவம் மிகவும் கடினமானதாக இருந்தது என்று பிரதமர் மோடி நினைவுகூர்ந்திருக்கிறார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவு..! அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
"என் அம்மாவின் வாழ்க்கையில், இந்தியப் பெண்களின் சக்தியைப் பார்க்கிறேன். தவம், தியாகம் மற்றும் சேவை ஆகியவற்றைக் காண்கிறேன். அம்மாவையும், அவரைப் போன்ற கோடிக்கணக்கான பெண்களையும் பார்க்கும் போதெல்லாம், இந்தியப் பெண்களால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்று தோன்றுகிறது" என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான வெற்றித் தருணங்களில் தன் தாயாரைச் சந்தித்து அவரிடம் ஆசி பெறுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
2016ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியானதும் பல தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. அப்போது மோடியின் தாயார் ஹீராபென் தன் மகனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வங்கி வாசலில் வரிசையில் நின்ற காட்சி நாடு முழுவதும் பேசப்பட்டது.
அண்மையில் குஜராத் தேர்தல் நடைபெற்றபோது தள்ளாத வயதிலும் ஜனநாயகக் கடமையை ஆற்ற வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குப்பதிவு செய்தார் ஹீராபென்.
பிரதமர் மோடி பங்கேற்ற பொது நிகழ்ச்சிகளில் ஹீராபென் மோடி அதிகம் கலந்துகொண்டதில்லை. அகமதாபாத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹீராபென் மோடிக்கு நெற்றில் பொட்டு வைத்து வாழ்த்தினார். 2001ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி முதல் முறை பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த இரண்டு சந்தர்ப்பங்கள் தவிர வேறு நிகழ்வுகளில் தனது தாய் பங்கேற்கவில்லை என பிரதமர் மோடி சொல்கிறார்.
2015ல் பேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க் உடன் பிரதமர் மோடி நடத்திய உரையாடலில் தன் தாயாரைப் பற்றிப் பேசும்போது, "என் தந்தை இறந்ததும் என் தாயார் என்னை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். வீடுகளில் வேலைக்காரியாகக்கூட உழைத்திருக்கிறார்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
கடந்த ஜூன் 18ஆம் தேதி ஹீராபென் மோடி தனது நூறாவது வயதில் அடியெடுத்து வைத்தபோது பிரதமர் மோடி அவரை வணங்கி ஆசி பெற்றார். அதுமட்டுமின்றி அதே நாளில் காந்தி நகரில் உள்ள ராய்சான் பெட்ரோல் பங்க் சாலைக்கு 'பூஜ்ய ஹீராபென் சாலை' என்று பெயர் சூட்டப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் இருந்த பிரதமர் மோடி தாயைப் பார்க்க அன்று மாலையே விமானத்தில் அகமதாபாத் வந்து நலம் விசாரித்துச் சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலையில் பிரதமரின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரதமரின் தாயார் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.