bill gates met uttar pradesh chief minister yogi adithyanath

இந்தியா வந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவரும் உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் தொழில்முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பில்கேட்ஸ் பேசினார்.

இந்நிலையில், இன்று உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பில்கேட்ஸ் சந்தித்து பேசினார்.

அப்போது, பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உத்தரப் பிரதேச அரசுடன் இணைந்து அம்மாநிலத்தில் சுகாதார மேம்பாடு தொடர்பாக திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில், தொற்று நோய்களைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பில்கேட்ஸிடம் யோகி ஆதித்யநாத் விளக்கினார். 

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் விதமாக அங்கன்வாடிகளில் சத்தான உணவை வழங்குவது தொடர்பான மாநில அரசின் திட்டங்களில் இணைந்து செயல்படுவது குறித்து பில்கேட்ஸ் ஆலோசனை நடத்தினார். மேலும் தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் திட்டம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவது குறித்தும் பில்கேட்ஸ், யோகி ஆதித்யநாத்துடன் ஆலோசனை நடத்தினார்.

பில்கேட்ஸ் அறக்கட்டளை மூலம், பில்கேட்ஸ் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.