பில்கிஸ் பானு வழக்கு விவகாரத்தில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு குற்றவாளிகளை கௌரவிப்பது போன்று உள்ளதாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் மார்ச் 3-ம் தேதி ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானுவையும், அவரின் குடும்பத்தினர் 7 பேரையும் ஒரு கும்பல் தாக்கியது. அந்தத் தாக்குதல் நடந்த நேரத்தில் பில்கிஸ் பானு 5 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவரைத் தாக்கிய அந்த கும்பல் அவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் வைத்திருந்த இரண்டரை வயதுக் குழந்தை உல்ளிட்ட 7 பேரையும் கொலை செய்து தப்பி ஓடியது.

இந்த வழக்கில் 11 பேரை சிபிஐ கைது செய்தது. இவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது இதை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்த குற்றவாளிகளில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தங்களின் தண்டனையை குறைக்க அல்லது ரத்து செய்யக் கோரினார். அதற்கு குற்றம் நடந்தது குஜராதத்தில், ஆதலால் குற்றவாளிகள் குறித்து குஜராத் அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தது.

இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் அமைப்புகள், தேசிய மனித உரிமைகள் ஆணையம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை... இது மனித குலத்திற்கே அவமானம் என கொதித்தெழுந்த குஷ்பு

இந்நிலையில், மகாராஷ்டிர துணை முதல்வரும், மாநில பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், குஜராத் அரசின் இந்த செயல் குற்றவாளிகளை கௌரவிப்பது போன்று உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் மரியாதை சரியல்ல. சட்ட மேலவையில் நடந்த விவாதத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் இதனைத் தெரிவித்தார்.