பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் விடுவிப்பு; குஜராத், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!
பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரை விடுவித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரை விடுவித்தது தொடர்பாக குஜராத் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டது. இந்த வழக்கில் குஜராத் அரசு பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பியதுடன், குற்றவாளிகள் 11 பேரையும் வழக்கில் இணைக்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி என்வி ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ''பில்கிஸ் பானு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை விடுவிக்குமாறு நீதிமன்றம் கூறவில்லை. சட்டத்தின்படி அவர்களை கருணை அடிப்படையில் விடுவிப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்கலாம் என்றுதான் கூறி இருந்தது. விடுவிக்கப்பட்டவர்கள் சட்டத்தின்படி தான் விடுவிக்கப்பட்டார்களா என்பது தெரிய வேண்டும்'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட 11 பேரையும் சேர்க்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய மற்றும் குஜராத் அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி என்வி ரமணா உத்தரவு பிறப்பித்தார்.
பில்கிஸ் பானு கொலை வழக்கில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர்கள் விடுவிக்கப்பட்டனர். குஜராத் அரசு பொதுமன்னிப்பு மற்றும் குற்ற தன்மையை கருத்தில் கொண்டு இவர்களை விடுவிக்க ஆணை பிறப்பித்து இருந்தது. இதைத் தொடர்ந்து தண்டனை பெற்ற 11 பேரும் கோத்ரா துணைச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுக்கு பூமாலை போட்டும், ஆரத்தி எடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை கடுமையாக அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்து இருந்தன. நாட்டு மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இவர்களது விடுதலையை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மற்றும் ஒரு மனுதாரர் என மூவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்து இருந்தனர். இந்த வழக்கு தான் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தது.