பீகார் பள்ளி கல்வித்துறை மீதான நம்பகத்தன்மை தொடர்ந்து சிதைந்து வருகிறது. 

நீட் தேர்வில் தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பீகார் மாணவி கல்பனா குமாரி, 12ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு தேவையான போதிய வருகைப்பதிவு இல்லாமல் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் வெளியாகியதால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பாக அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. 

பீகார் பள்ளி கல்வி வாரியம் 12ம் வகுப்பு முடிவுகளை வெளியிட்டது. இதில், சில மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண்ணை விட அதிகமான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதாத மாணவர்களுக்கு கூட மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

கணிதத்தில் மொத்த தியரி மதிப்பெண்ணே 35 தான். ஆனால் பீம் குமார் என்ற மாணவருக்கு 38 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, சந்தீப் ராஜ் என்ற மாணவருக்கு இயற்பியல் பாடத்தில் தியரி பிரிவில் 38 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மொத்த மதிப்பெண்ணே 35 தான். அதே மாணவருக்கு வேதியியல் செய்முறை தேர்வில் மொத்த மதிப்பெண்ணான 35 விடவும் அதிகமாக 39 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு விலங்கியல் தேர்வே எழுதாத வைஷாலி என்ற மாணவிக்கு அந்த பாடத்திற்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள், பீகார் கல்வித்துறையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கும் சந்தேகத்திற்கும் உள்ளாக்குகின்றன.