பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் நாலந்தா மருத்துவமனை  வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மருத்துவமனை வளாகம் மற்றும் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. பீகார், உத்தர பிரதேசம் உட்பட பல்வேறு வட மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. 

உத்தரபிரதேசத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்துகளில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பீகாரில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது. தலைநகர் பாட்னாவில் உள்ள நாலந்தா மருத்துமனையில் வெள்ளம் புகுந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவிலும் முழங்கால் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

100 ஏக்கர் பரப்பளவில் 750 படுக்கை வசதி கொண்ட நாளந்தா மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மீன்கள் துள்ளி குதித்து விளையாடின. அது மட்டுமின்றி, பாம்பு, தேள் போன்றவையும் மிதந்து வந்ததால் நோயாளிகள் பீதி அடைந்தனர்.

 வெள்ளத்தால் நோயாளிகள் படுக்கையை விட்டு கீழே இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை பீகாரின் பெரும்பாலான பகுதிகளுக்கு கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.