பீகாரில் கடுமையான வெயில் காரணமாக நேற்று ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.  

தென்மேற்கு பருவ மழை தொடங்கி பல மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையிலும் நாட்டின் வட மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில், பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கடுமையான வெயிலுக்கு 27 பேரும், கயாவில் 12 பேரும், நவாடா பகுதியிலும் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுதொடர்பாக, சதார் மருத்துவமனை மருத்துவர் சுரேந்திரகுமார் சிங் கூறுகையில், வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 45-க்கும் மேற்பட்டோர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மயக்கமாகவும், சிலர் மனநிலை தடுமாற்றத்துடனும் உள்ளனர். ஆகையால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இதனையடுத்து கடுமையான வெளியிலுக்கு உயிர் இழந்த குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி செய்யப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இதனிடையே மத்திய அமைச்சர் ஹர்ஸ்வர்தன் கூறுகையில், உயிரிழப்பு ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.