பீகார் காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு மற்றும் மாநிலத் தலைவர் ராஜேஷ் ராம் ஆகியோர் மீது, சட்டமன்றத் தேர்தல் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தியால் அக்கட்சித் தொண்டர்கள் பாட்னா விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தினர்.
பாட்னாவில் காங்கிரஸ் கட்சியின் பீகார் மாநில பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு மற்றும் மாநிலத் தலைவர் ராஜேஷ் ராம் ஆகியோர் மீது பாட்னா விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பீகார் காங்கிரஸில் வரும் சட்டமன்றத் தேர்தல் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த சர்ச்சை கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.
விமான நிலையத்தில் வைத்து தாக்குதல்
கிருஷ்ணா அல்லவாரு, பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ஷகீல் அகமது கான் ஆகியோர் டெல்லியில் இருந்து பாட்னா திரும்பியபோது, விமான நிலையத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், வேட்பாளர் ஒதுக்கீட்டில் அதிருப்தி தெரிவித்தும், 'சீட்டுகளை விற்றதாக' குற்றம் சாட்டியும் அவர்களுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
இந்தக் கோபத்தில், தொண்டர்கள் பீகார் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு மற்றும் அவரது குழுவினரை தாக்கத் தொடங்கினர். நிலைமை மோசமடைந்ததையடுத்து, அல்லவாரு அங்கிருந்து அவசரமாகத் தப்பியோட வேண்டியிருந்தது.
மேலிட உத்தரவுப்படி செயல்பட்டாரா?
இதற்கிடையில் கிருஷ்ணா அல்லவாரு, ராகுல் காந்தி மற்றும் கட்சி மேலிடத்தின் உத்தரவுகளின்படியே செயல்பட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். கட்சி சார்பில் நடத்திய சர்வே மற்றும் மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுத்துள்ளார். தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் அவர் முடிவெடுக்கவில்லை. கட்சியின் நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என அவர்கள் கருதுகின்றனர்.
"தற்போது அல்லவாரு மீது தாக்குதல் தொடுப்பவர்கள், ராஷ்டிரிய ஜனதா தளத்திற்காக (RJD) காங்கிரஸ் கட்சியின் நலன்களில் சமரசம் செய்து கொண்டவர்கள். கட்சியின் ஒழுங்குமுறையையும் பொறுப்புணர்வையும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களே கிருஷ்ணாவை விமர்சிக்கிறார்கள்" என்று காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகிறார்.
தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இந்தச் சர்ச்சை, பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பைக் காட்டுகிறது.
