பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக 22 நிமிடங்களில் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பஹல்காமில் நமது பெண்களின் குங்குமத்தை அழித்தவர்களின் இருப்பிடத்தை நாம் 22 நிமிடங்களில் அழித்து இருக்கிறோம் என்று பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் பிகானீர் என்ற இடத்தில் பேசினார்.

காஷ்மீரில் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர். இதில், இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டு இருந்தனர். அனைவரும் ஆண்களே. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா கடுமையான ஏவுகணை தாக்குதல்களை நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அழித்து இருந்தது.

தேசத்தை விட முக்கியமானது எதுவும் இல்லை - மோடி

இந்த சம்பவத்துக்குப் பின்னர் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் பிகானீர் சென்று இருந்த பிரதமர் மோடி மக்கள் முன்பு பேசினார். அப்போது, ''பஹல்காமில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நாம் 22 நிமிடங்களில் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் ஒன்பது மறைவிடங்களை அழித்தோம். தேசத்தை விட முக்கியமானது எதுவும் இல்லை என்பதை ராஜஸ்தான் நமக்கு உணர்த்தி இருக்கிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி நமது மக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, நமது சகோதரிகளின் குங்குமத்தை பறித்தனர். பஹல்காமில் குறிவைக்கப்பட்ட குண்டுகள் நாட்டின் 140 மக்களின் இதயங்களை துளைத்துள்ளது. இதற்கு முன்பு இல்லாத வகையில் தீவிரவாதிகளை பழிவாங்குவதற்கு முடிவு செய்து அதை நிறைவேற்றினோம்.

முப்படைகளுக்கு அதிகாரம் - மோடி பேச்சு

நமது முப்படைகளுக்கு பயந்து பாகிஸ்தான் தலை வணங்கியது. ஏப்ரல் 22ஆம் தேதி நமது மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகத்தான் அவர்களது கூடாரங்களை 22 நிமிடங்களில் அழித்து இருக்கிறோம். நமது சகோதரிகளின் சிந்தூர் குறிவைக்கப்படும்போது, ​​அதன் மூலம் எதிரியையே அழிக்க முடியும் என்பதை இந்த நாடு உலகிற்கு காட்டி இருக்கிறது. இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலால் இன்று நாம் வலுவாக நிற்கிறோம். எங்களது அரசாங்கம் முப்படைகளுக்கும் சுதந்திரம் அளித்து இருந்தது. மேலும், முப்படைகளும் இணைந்து, பாகிஸ்தானை அடிபணிய வைக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன.

இந்தியாவின் உள்கட்டமைப்பு - மோடி 

இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதற்காக, நவீன உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக மிகப்பெரிய முயற்சி நடந்து வருகிறது. இன்று, இந்தியா தனது ரயில்வே கட்டமைப்பையே மாற்றி வருகிறது. வந்தே பாரத், அம்ரித் பாரத், நமோ பாரத் ரயில்கள் புதிய வேகத்தையும் முன்னேற்றத்தையும் உருவாக்கி வருகின்றன. இந்தியாவின் சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் நவீனமாக இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாங்கள் பாடுபட்டு வருகிறோம். வேகமாக பணிகளும் நடந்து வருகிறது.

நாட்டில் தற்போது வரைக்கும் நாங்கள் 1,300 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை நவீனமாக்கி வருகிறோம். இவற்றில் 100 க்கும் மேற்பட்ட அம்ரித் பாரத் நிலையங்கள் செயல்பாட்டுக்கு தயாராக இருக்கின்றன என்று பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.