பொது வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டங்களை கைவிட வலியுறுத்தியும் மத்திய அரசின் வங்கி ஊழியர்களின் விரோத போக்கை கண்டித்தும் வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக வங்கிகள் அறிவித்து இருக்கிறது.
வங்கிகள் வேலைநிறுத்தம் :
தொழிலாளர்களை பாதிக்கும் மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து, திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. வங்கித் துறையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மார்ச் 22, 2022 அன்று மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்திற்குப் பிறகு நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கான முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசின் கொள்கைகள் அரசு ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் உள்ளதாகத் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறது.
மார்ச் 28, 29 வங்கிகள் விடுமுறை :
அகில இந்தியா தொழிற்சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக வரும் 28 மற்றும் 29ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோத கொள்கைகளுக்கு எதிராக இந்த வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் வங்கித் துறையும் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முடங்கும் வங்கி சேவை :

வரும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியும் அறிவித்துள்ளது. ஓய்வுபெற உள்ள தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றாலும் கூட அவர்களுக்கு ஓய்வூதியம் என்பது பாதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி, உருக்கு, எண்ணெய், தொலைத்தொடர்பு, தபால், வருமான வரி, காப்பர், காப்பீடு என பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் பல நூற்றுக்கணக்கான இடங்களில் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
