Father's Day 2023: தந்தையர் தினத்தில் அவர் மீது நீங்கள் வைத்து இருக்கும் அன்பு மற்றும் பாசத்தை ஏதேனும் பரிசு பொருள் கொடுத்தும் வெளிப்படுத்தலாம்.
அப்பா என்ற சொல் அனைவர் மனதிலும் எப்போதும் தனிச் சிறப்பு கொண்டிருக்கும். ஒவ்வொருத்தரும், தன் வாழ்க்கையை பெரும்பாலும் தந்தையை பார்த்தே கற்றுக் கொள்வர். பலரின் ரோல் மாடலாக விளங்கும் அப்பாக்களுக்கு பெரும்பாலும் கொண்டாட்டம், மகிழச்சி மிக அரிதாகவே கிடைக்கும் என தோன்றும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் இருக்கும். ஒரு சிலர் சோஷியலாக பழகி வந்தாலும் கூட, சில அப்பாக்கள் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாக இருந்தே பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என நினைப்பர்.
எது எப்படி இருந்தாலும், தந்தையர்களுக்கு தங்கள் குழந்தைகள் எப்போதும் ஸ்பெஷல் தான். பல தந்தையர்கள் தங்களின் பாசத்தை வெளிக்காட்டாமல் இருந்தாலும், அவர்களுக்குள் தனது குழந்தையின் மீது தனி அன்பு, பாசம் எப்போதும் இருக்கும். இதே போன்று குழந்தைகளுக்கும் தன் தந்தையை கட்டாயம் பிடிக்கும். தந்தையர் தினத்தில் அவர் மீது நீங்கள் வைத்து இருக்கும் அன்பு மற்றும் பாசத்தை ஏதேனும் பரிசு பொருள் கொடுத்தும் வெளிப்படுத்தலாம். அந்த வகையில் தந்தையர் தினத்திற்காக அவருக்கு எந்தெந்த பரிசுகளை வாங்கலாம் என்ற பட்டியலை கீழே காணலாம்.
1 - வாட்டர் பாட்டில்: தலைப்பை படித்ததும் சாதாரண வாட்டர் பாட்டிலை எப்படி பரிசாக கொடுப்பது என நினைக்க வேண்டாம். எந்தநெந்த நேரத்திற்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அளவுக் கோடு கொண்ட வாட்டர் பாட்டில் இது. பல பிராண்டுகள் இது போன்ற வாட்டர் பாட்டில்களை இந்தியாவில் தற்போது விற்பனை செய்து வருகின்றன. இவை ஆன்லைனிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன.
2- ஹைப்பர்-வோல்ட் பாடி மசாஜ் கன்: நம் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற அயராது உழைத்துக் கொண்டு இருக்கும் தந்தைக்கு ஓய்வு நேரத்தில் மிக எளிதில் மசாஜ் செய்து கொள்ளக் கூடிய எலெக்ட்ரிக் சாதனம் தான் இந்த மசாஜ் கன். இதை கொண்டு உடல் முழுக்க மசாஜ் செய்து கொள்ளலாம். பார்க்க ஹேர் டிரையர் போன்று காட்சியளித்தாலும், இது உடல் வலியை போக்குவதில் சிறப்பாக செயலாற்றுவதாக பலர் ஆன்லைன் விற்பனை தளங்களில் கமெண்ட் செய்துள்ளனர்.

3 - எலெக்ட்ரிக் சைக்கிள்: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த துவங்கி விட்டனர். மேலும் சிலர் உடல்நலனை கருத்தில் கொண்டு அருகாமையில் உள்ள இடங்களுக்கு நடக்கவும் பழகி வருகின்றனர். இந்த நிலையில், தந்தைக்கு அழகான எலெக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை பரிசாக வழங்கலாம்.
அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு இதை எடுத்துச் செல்லும் போது தந்தையரின் உடல் ஆரோக்கியமும் மேம்படும். சைக்கிள் ஓட்டும் நிலையை கடந்து இருப்பின், தந்தை வீட்டில் ஒய்வு நேரத்தை கழிக்க சவுகரியமான நாற்காலி ஒன்றை வாங்கி பரிசாக வழங்கலாம்.
4 - புத்தகம்: தந்தைக்கு வாசிக்கும் பழக்கம் இருப்பின், உங்களுக்கு அதிகம் பிடித்த நாவல் அல்லது ஏதேனும் புத்தகத்தை அவருக்கு பரிசாக வழங்கலாம். இவ்வாறு செய்யும் போது அவர் ஏற்கனவே படித்திராத அல்லது நீண்ட நாள் படிக்க ஆசைப்படும் புத்தகம் எதையாவது வாங்க முயற்சி செய்யலாம்.
5 - வாழ்த்து அட்டை: தந்தைக்கு பரிசாக எதை கொடுப்பது என்றே தெரியவில்லையா? அதிக குழப்பம் அடையாமல், நச்சென்று வாழ்த்து அட்டை ஒன்றை கடையில் இருந்து வாங்கியோ அல்லது சொந்தமாக வீட்டிலேயே செய்தோ பரிசாக கொடுக்கலாம். இத்துடன் தந்தைக்கு மிகவும் பிடித்த உணவு பொருள் அல்லது இனிப்பு பண்டம் வாங்கி வந்து ஊட்டி விடலாம்.
