வெப்ப தலைநகராக மாறும் பெங்களூரு? 146 நாட்களாக மழை இல்லை!
வானிலை முன்னறிவிப்புகள் இருந்தபோதும், கடந்த 146 நாட்களாக மழை இல்லாமல் பெங்களூருவின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக, கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே அங்கு தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடி வரும் நிலையில், கடந்த 146 நாட்களாக மழை பெய்யாமல் இருப்பதும் வெப்ப தலைநகராக பெங்களூரு மாறி வருகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை முன்னறிவுப்புகள் தெரிவிக்கப்பட்டாலும், கடந்த 146 நாட்களாக மழை இல்லாமல் பெங்களூரு நகரம் தவித்து வருகிறது. இருப்பினும், வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலும், இன்னும் சில பகுதிகளிலும் ஆங்காங்கே லேசாக மழை பெய்தாலும் அதனை வானிலை ஆய்வு மையம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் பரவலாக மழையும் இல்லை, நகரின் மையத்தில் இருக்கும் இந்திய வானிலை மையத்தின் மத்திய கண்காணிப்பு நிலையம் அருகே மழையும் பெய்யவில்லை.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, பெங்களூருவில் கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி மழை பெய்தது. இதுகுறித்து இந்திய வானிலை மையத்தின் பெங்களூரு விமான நிலைய வானிலை ஆய்வு அலுவலகத்தின் விஞ்ஞானியும், இயக்குநருமான சி.எஸ்.பாட்டீல் கூறுகையில், பசுபிக் பெருங்கடலின் வெப்பமயமாதல் இந்தியாவில் குறைந்த மழைப் பொழிவை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
வளிமண்டலம் நிலையாக இருக்கிறது. இது நிலையற்றதாக இருக்கும்போதுதான் மேகங்கள் உருவாகும். கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு வளிமண்டலம் நிலையாகவேத்தான் இருக்கும். 2023ஆம் ஆண்டின் வறட்சி சூழ்நிலை காரணமாக மண்ணில் ஈரப்பதம் இல்லை. இதனால், வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் மழைப்பொழிவு இல்லை எனவும் சி.எஸ்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், கடந்த 42 ஆண்டுகளில் பெங்களூருவில் சராசரி வெப்பநிலை கிட்டத்தட்ட ஒரு டிகிரி அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளில் அதிகமான அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் இருந்து நீர் விரைவில் ஆவியாக இது வழிவகுக்கிறது. கடந்த மூன்றாண்டுகளாக குறைந்து வரும் மழையால், நிலத்தடி நீர் அதிகரிப்பிலும், நீர் தேக்கங்களை நிரப்புவதிலும் ஏற்படும் சிக்கல், தற்போதுள்ள தண்ணீர் பற்றாக்குறையை மேலும் மோசமாக்குகிறது. இதனை தடுக்க, நகரத்தின் நிலப்பரப்பை நுண்துளைகளாக மாற்றுவதன் மூலம் நீர் நகரமயமாக்கலுக்கு நாம் திட்டமிட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.