பெங்களூருவில் ஆன்லைனில் ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு டைல்ஸ் துண்டு டெலிவரி செய்யப்பட்டு ரூ.1.86 லட்சம் மோசடி நடந்துள்ளது. இதேபோல், மும்பையில் மூதாட்டி ஒருவர் பால் ஆர்டர் செய்ய முயன்று ரூ.18.5 லட்சம் இழந்துள்ளார்.

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருளுக்குப் பதிலாக டைல்ஸ் துண்டு டெலிவரி செய்யப்பட்டதில், பெங்களூரைச் சேர்ந்த நபர் ரூ.1.86 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

பெங்களூருவில் யெலச்செனஹள்ளியைச் சேர்ந்த பிரேமானந்த் என்ற சாப்ட்வேர் என்ஜினியர், கடந்த அக்டோபர் 14ஆம் தேதி ஆன்லைனில் ஒரு சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7) ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்துள்ளார். அவர் தனது ஹெச்டிஎஃப்சி (HDFC) கிரெடிட் கார்டு மூலம் முழுத் தொகையையும் செலுத்தியுள்ளார்.

அக்டோபர் 19ஆம் தேதி மாலை 4.16 மணியளவில் அவருக்கு பார்சல் டெலிவரி செய்யப்பட்டது. உடனடியாக அவர் அதை வீடியோ பதிவு செய்து கொண்டே பிரித்துள்ளார். அதிர்ச்சியளிக்கும் விதமாக, அவர் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போனுக்குப் பதிலாக, பெட்டிக்குள் ஒரு சதுர வடிவ வெள்ளை டைல்ஸ் துண்டு மட்டுமே இருந்துள்ளது.

இதையடுத்து, பிரேமானந்த் உடனடியாக தேசிய சைபர் கிரைம் புகார் இணையதளத்தில் (National Cybercrime Reporting Portal) புகார் அளித்துள்ளார். பின்னர், குமாரசுவாமி லேஅவுட் காவல் நிலையத்தை அணுகி, முறைப்படி புகார் அளித்தார். போலீசார் முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்து, இந்த மோசடிக்கு பின்னணியில் உள்ளவர்களைக் கண்டுபிடிக்க விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மற்றொரு ஆன்லைன் மோசடியில் ரூ.18.5 லட்சம் பறிப்பு

இதேபோல, மும்பையில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ஆன்லைன் டெலிவரி செயலி (App) மூலம் ஒரு லிட்டர் பால் ஆர்டர் செய்ய முயன்ற 71 வயது மூதாட்டி ஒருவர், ரூ.18.5 லட்சம் வரை இழந்தார்.

வடலாவில் வசிக்கும் அந்த மூதாட்டிக்கு, பால் நிறுவன நிர்வாகி என்று கூறிக்கொண்ட தீபக் என்ற நபர் ஒரு அழைப்பு விடுத்துள்ளார். அவர் ஒரு இணைப்பை (Link) அனுப்பி, ஆர்டரை முடிக்க தனது விவரங்களை நிரப்பச் சொல்லியுள்ளார்.

மோசடி வலையை அறியாமல், மூதாட்டி சுமார் ஒரு மணி நேரம் அழைப்பில் இருந்தபடியே அவர் சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றியுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் தனது மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்து தனது மொத்த சேமிப்பும் காலியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து மூதாட்டியின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடந்தி வருகிறார்கள்.

சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

இந்தச் சம்பவங்களின் அடிப்படையில், ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போதும், தனிப்பட்ட விவரங்களைப் பகிரும்போதும் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பும் இணைப்புகளை (Links) கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களை தொலைபேசி அழைப்புகளில் பகிர வேண்டாம்.