ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் மாஸ்க் இல்லாத புதிய புகைப்படம்!
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபரின் மாஸ்க் இல்லாத புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ப்ரூக் ஃபீல்டில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள 'ராமேஸ்வரம் கஃபே' உணவகம் பிரபலமானது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சாப்பிடுகின்றனர். இங்கு கடந்த 1ஆம் தேதி பிற்பகலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கு, இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை விசாரிக்கும் என்.ஐ.ஏ.விடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, விபத்து நடந்த உணவகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டு, அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.
சந்தேக நபர் என்று என்.ஐ.ஏ. வெளியிட்ட புகைப்படத்தில் இருப்பவர், மாஸ்க், தொப்பி, கண்ணாடி அணிந்து இருந்தார். இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபரின் மாஸ்க் இல்லாத புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படத்தில் தொப்பி, மாஸ்க், கண்ணாடி இல்லாமல் சந்தேக நபர் பேருந்தில் பயணிப்பது போன்று உள்ளது. மற்றொரு புகைப்படத்தில் மாஸ்க், தொப்பி, கண்ணாடி அணிந்து அவர் பேருந்தில் பயணிப்பது போன்று உள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பெங்களூரு நகர போலீசார் சந்தேகத்திற்குரிய குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.