bengaluru city faced heavy rain people struggle a lot due to traffic jam

பெங்களூர்: 
பெங்களூரில் பெய்த கனத்த மழையால், நகரில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. 

பெங்களூரு நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கனத்த மழை பெய்தது. இன்று மதியம் முதல் மாலை வரை பெய்த கன மழையில், பெங்களூர் நகரின் முக்கியப் பகுதியான எலக்ட்ரானிக் சிட்டி முதல் சில்க் போர்டு வரையிலான சாலையில் பெருமளவு மழை நீர் பெருக்கெடுத்தது. குறிப்பாக எலக்ட்ரானிக் சிட்டியை ஒட்டிய பிரதான சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் வாகனங்கள் நகரமுடியாமல் தவித்தன. அங்கங்கே வாகனங்கள் இயங்க முடியாமல் நின்று போனதால், நீண்ட வரிசையில் வாகனங்கள் தேங்கி, போக்குவரத்து முடங்கிப் போனது.

பெங்களூரு நகரின் புறநகர்ப் பகுதியான சில்க் போர்டு ஒசூர் சாலையிலும் வெள்ள நீர் தேங்கியது. இதனால், மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய பணியாளர்கள் பெரும் சிரமப்பட்டனர். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் நிறைந்த எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் இருந்து அவர்கள் வீடு வந்து சேர்வதற்குள் படாத பாடு பட்டனர்.