பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக தான் ஏன் போட்டியிடுகிறேன் என்பது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் மனம் திறந்திருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கி தீவிர பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். பெங்களூரு மத்திய தொகுதியில் தமிழர்கள் நிறைந்திருப்பதாலேயே இந்தத் தொகுதியில் பிரகாஷ் ராஜ் போட்டியிடுவதாகத் தவலகள் வெளியாகின. 

தற்போது இந்தத் தொகுதியை தான் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் மனம் திறந்திருக்கிறார். இதுபற்றி தனியார் தொலைக்காட்சியில் அவர் கூறுகையில், “மத்திய பெங்களூரு தொகுதிக்குட்பட்ட தொகுதியில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இந்தத் தொகுதியில் உள்ள ஜோசப் மேல் நிலைப்பள்ளியில்தான் நான் படித்தேன். அதுபோல இந்தத் தொகுதியில் உள்ள ஜோசப் கல்லூரியில்தான் கல்லூரி படிப்பை முடித்தேன்.

 

சினிமாவுக்காக அலைந்து திரிந்த காலத்தில் இந்தத் தொகுதியில் சுற்றித் திரிந்திருக்கிறேன். பெங்களூரு மத்திய தொகுதி மினி இந்தியாவுக்கு சமம். இங்கே கன்னடர்கள் மட்டுமல்ல, தெலுங்கர்கள், தமிழர்கள், மலையாளிகள் என இன்னும் பிற மாநிலத்தவரும் இருக்கிறார்கள். எனது சொந்தத் தொகுதி என்பதால்தான், இங்கே போட்டியிட முடிவு செய்தேன்.

 

பாஜகவுக்கு எதிராக கேள்வி கேட்கவே இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். பெங்களூரு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் பிரகாஷ் ராஜ், பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாகத் தாக்கி வாக்குகளைச் சேகரித்து வருகிறார்.