பெங்களூருவில், மத்திய வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து, ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பும் வேனை மறித்த கும்பல், சுமார் ரூ.7 கோடியை கொள்ளையடித்துச் சென்றது. பணத்துடன் தப்பிச் சென்ற கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், மத்திய அரசு வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி நாடகமாடிய மர்ம நபர்கள், ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பும் வேனை மறித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சுமார் 7 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் ஜெயநகர் பகுதியில் உள்ள அசோகா தூண் அருகே இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது.
போலீஸ் வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, ஜே.பி.நகரில் உள்ள எச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி கிளையில் இருந்து பணம் ஏற்றிக்கொண்டு சி.எம்.எஸ் (CMS) நிறுவனத்தின் வேன் வந்துகொண்டிருந்தது. அப்போது, வேனின் பாதையை ஒரு இன்னோவா (Innova) கார் வழிமறித்து நிறுத்தியது.
காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள், தங்களை மத்திய அரசின் வரித்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டனர். "ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும், பணத்தை ஆய்வு செய்ய வேண்டும்" எனக் கூறி, சில நிமிடங்களில் ஏ.டி.எம். வேனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
7 கோடி பணத்துடன் தப்பிய கும்பல்
சந்தேக நபர்கள் சி.எம்.எஸ் ஊழியர்களை மிரட்டி, அவர்களைத் தாங்கள் வந்த இன்னோவா காருக்குள் ஏற்றி, பணப் பெட்டிகளுடன் வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளனர். அங்கிருந்து டைரி சர்க்கிள் (Dairy Circle) நோக்கிச் சென்ற கொள்ளையர்கள், பின்னர் மேம்பாலத்தில் வைத்து ஊழியர்களை இறக்கிவிட்டு, பணத்துடன் தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளைக் கும்பல் பன்னர்கட்டா சாலை வழியாகத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.
தீவிர தேடுதல் வேட்டை
பெங்களூரு தெற்குப் பிரிவு காவல்துறையினர் நகரம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய சாம்பல் நிற இன்னோவா வாகனங்களைக் குறிவைத்து, பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜெயநகர், டைரி சர்க்கிள் மற்றும் பன்னர்கட்டா சாலை பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து, தப்பியோடிய வாகனத்தின் தடயங்களைத் தேடி வருகின்றனர்.
இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம், பெங்களூருவின் பாதுகாப்பு நிலை குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.


