beef sellers protest in uttarpradesh

உத்தரப்பிரதேசத்தில் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலானபாரதிய ஜனதா அரசு சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூட கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதைக் கண்டித்து மாநிலத்தில் உள்ள அனைத்து மாட்டிறைச்சி வியாபாரிகளும் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். 

தீவிர நடவடிக்கை

உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா அரசு, தேர்தலில் அளித்த வாக்குறுதியான சட்டவிரோத மாட்டிறைச்சிக் கடைகளை ஒழிப்போம், பசுக்கடத்தல், பசுவதையை தடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. 

சட்டவிரோத கடைகள்

முதல்வராக பொறுப்பு ஏற்ற யோகி ஆதித்யநாத் சட்டவிரோத இறைச்சிக்கூடங்களை மூட தீவிர நடவடிக்கை எடுக்கப்படும், பசுக் கடத்தலுக்கும் தடை விதித்துள்ளார். அதேசமயம், சட்டப்படி அங்கீகாரத்துடன் செயல்படும் இறைச்சிக்கடைகள்,இறைச்சி வெட்டும் கூடங்களை அதிகாரிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். 

வேலைநிறுத்தம்

ஆனால், அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தீவர நடவடிக்ைக எடுத்து இறைச்சிக்கடைகளை மூடி சீல் வைத்து வருகின்றனர். இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, லக்னோவில் உள்ள மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் திங்கள்கிழமை முதல் மாநிலம் முழுவதும் இறைச்சிக்கள் கடைகள் மூடி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்தனர்.

கடைகள் மூடல்
அதன்படி, நேற்று மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மாட்டிறைச்சிக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மாட்டிறைச்சிக் கடைக்காரர்களுக்கு ஆதரவாக மீன் விற்பனையாளர்களும் களத்தில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் ஒரு சில நகரங்களில் மீன் விற்பனையாளர்கள் கலந்து கொள்ளாததால், மக்கள் மாட்டிறைச்சிக்கு பதிலாக மீன்களை வாங்கிச் சென்றனர் 

இது குறித்து லக்னோவில் உள்ள பக்ரா கோஷ் வியாபாரி மண்டல பொறுப்பாளர் முபீன் குரோஷி கூறுகையில், “ மாநில அரசின் இறைச்சிக் கடைக்கு எதிரான கெடுபிடிகளைக் கண்டித்து இன்று(நேற்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கி இருக்கிறோம். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

எங்களுக்கு ஆதரவாக மீன் விற்பனையாளர்களும் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். அரசின் இந்த உத்தரவினால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார். 

மாட்டிறைச்சி வியாபாரிகளின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், அசைவ உணவு கடைகள், பிரபல அசைவக் கடைகளான டன்டே, ரஹிம்ஸ் ஆகியகடைகள் மாட்டிறைச்சிக்கு பதிலாக ஆட்டு இறைச்சி, கோழிக்கறிக்கு மாறிவிட்டனர்.