2000 ரூபாய் நோட்டு அச்சிடும் பணியை மத்திய அரசு நிறுத்திவிட்ட நிலையில், தற்போது புதிய 1000 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்தது. அத்துடன் இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள காலக்கெடு விதித்தது. அதனால் பொதுமக்கள் சொல்ல முடியா துயரம் அடைந்தனர். 

இதனையடுத்து புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள அறிமுகம் செய்யப்பட்டன. பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தவிர ஏற்கனவே நடைமுறையில் இருந்த மற்ற பழைய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய் என படிப்படியாக புதிய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

புதிய ரூபாய் நோட்டுகள் மாறுபட்ட வடிவங்களிலும், மாறுபட்ட அளவுகளில் மற்றும் கலர் கலராய் வெளியிடப்பட்டு வருகின்றன. அதுபோலவே கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடனும் இந்த நோட்டுகள் வெளிவந்துள்ளன. 

இந்நிலையில் தற்போது 2000 ரூபாய் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படாது என்று கூறி வந்த நிலையில் தற்போது 1000 புதிய நோட்டை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.