திருப்பதி மலைப்பாதையில் கரடி ஒன்று உலா வருவதால் பக்தர்கள் பீதியடைந்துள்ளனர்
திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், மலைப்பாதையில் சாலை மார்க்கமாகவும், ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி ஆகிய நடைபாதைகளிலும் செல்வது வழக்கம்.
ஆனால், திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி மான், கரடி, புலி உள்பட எண்ணற்ற வனவிலங்குகளின் சரணாலயமாக உள்ளது. இதனால் பக்தர்கள் செல்லும் நடைபாதையில் வன விலங்குகள் நுழையாமல் இருப்பதற்காக சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு சில நேரங்களில் மூர்க்கமான விலங்குகள் பக்தர்களின் பாதையில் குறுக்கிடுவது வழக்கம்.
மகாராஷ்டிரா கிரேன் விபத்து: தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உயிரிழப்பு!
அதனை தடுப்பதற்கான நட வடிக்கைகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, திருமலையிலோ அல்லது மலைப்பாதையிலோ வனவிலங்குகள் நடமாடினால் எந்த நேரமாக இருந்தாலும் உடனடியாக வன ஊழியர்கள் விரைந்து வந்து அவற்றை விரட்டி விடுவர். சில நேரங்களில் வன விலங்குகள் பிடிக்கப்பட்டு தூரமான காட்டுப்பகுதிகளில் விடப்படும்.
இந்த நிலையில், திருப்பதி மலைப்பாதையில் கரடி ஒன்று உலா வருவதால் பக்தர்கள் பீதியடைந்துள்ளனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்கள் செல்ல பயன்படுத்தப்படும் சாலையில் கரடி நடமாட்டம் தென்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி அலிபிரி பாதை வழியாக ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் அதோனியை சேர்ந்த குடும்பத்தினர் நடந்து சென்றனர். அப்போது, ஆஞ்சநேயர் சுவாமி சன்னதி தாண்டி சிறிது தூரத்தில் அக்குடும்பத்தினர் சென்றபோது, தனது தாத்தாவுடன் சென்ற 5 வயது சிறுவனை கண்ணிமைக்கும் நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்றது.
அதன்பின்னர், அச்சிறுவன் வனப்பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான பத்மாவதி இருதாலயா மருத்துவமனையில் அச்சிறுவனுக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு வேறு இடத்தில் விடப்பட்டது. இந்த நிலையில், திருப்பதி மலைப்பாதையில் உலா வரும் கரடியால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
