லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான பிரமாண பத்திரத்தை 2 வார காலத்திற்குள் தாக்‍கல் செய்ய வேண்டும் என இந்திய கிரிக்‍கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்திய கிரிக்‍கெட் கட்டுப்பாட்டு வாரியமான BCCI அமைப்பில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிபதி லோதா தலைமையிலான குழு பரிந்துரை செய்தது. ஆனால் இந்த பரிந்துரைகள் சிலவற்றை நிறைவேற்றுவதில், சிக்‍கல்கள் இருப்பதாக BCCI தெரிவித்திருந்தது. இதனால், பி.சி.சி.ஐ.க்‍கும், உச்சநீதிமன்றத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்‍கு இருந்து வருகிறது.

இப்பிரச்சினை தொடர்பான வழக்‍கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. ஏற்கெனவே லோதா குழு பரிந்துரைத்தபடி மேற்கொள்ளப்பட்டிருக்‍கும் நடவடிக்‍கைகள் குறித்து 2 வார காலத்திற்குள் பிரமாணப் பத்திரம் தாக்‍கல் செய்ய வேண்டும் என BCCI தலைவர் மற்றும் செயலாளருக்‍கு நீதிபதி உத்தரவிட்டார். 

BCCI மேற்கொள்ளும் நிதி சார்ந்த ஒப்பந்தங்களுக்‍கு ஒரு அளவுகோல் வரையறுப்பது குறித்து லோதா குழு முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, இந்த அளவை மீறும் ஒப்பந்தங்கள் லோதா குழுவால் அங்கீகரிக்‍கப்பட வேண்டும் என்றும் கூறினார். 

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியக் கணக்கை தணிக்கை​செய்ய தனிக்குழு நியமிக்கப்பட வேண்டும் - கணக்‍கு தணிக்‍கை குழுவை லோதா கமிட்டியே நியமிக்‍க வேண்டும் - லோதா கமிட்டியின் ஆலோசனைகளை ஏற்றால் மட்டுமே மாநில கிரிக்‍கெட் சங்கங்களுக்‍கு நிதி ஒதுக்‍கீடு செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதுகுறித்து சர்வதேச கிரிக்‍கெட் கவுன்சிலான ஐ.சி.சி. தலைவரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்‍கின் அடுத்த விசாரணை வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது.