கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு ரூ.50,000 அபராதம்: பெங்களூரு மாநகராட்சி அதிரடி!
சட்டவிரோதமாக பேனர் வைத்ததாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து பெங்களூரு மாநகராட்சி அதிரடி உத்தரவிட்டுள்ளது
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் சட்டவிரோத ஃப்ளெக்ஸ் பேனர் வைத்ததாக, அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து பெங்களூரு மாநகராட்சி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
துணை முதலமைச்சராகவும், பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருக்கும் டி.கே.சிவக்குமார், பெங்களூரு நகரத்தில் ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது என அனைத்து அரசியல் கட்சிகளையும் வலியுறுத்தியதுடன், சட்டவிரோதமாக ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைத்தால் பெங்களூரு மாநகராட்சி ரூ.50,000 அபராதம் விதிக்கும் என கடந்த வாரம் எச்சரித்திருந்த நிலையில், அவருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வசந்தநகர் சப்-டிவிஷன் உதவி வருவாய் அதிகாரி தலைமையிலான குழுவினர், குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஃப்ளெக்ஸ் பேனரை அகற்றியதாகவும், அக்குழுவினரே, காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்கு ரூ.50,000 அபராதம் விதித்ததாகவும் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விட்டுப்போன உறவுகள் புதுப்பிக்கப்படுமா? பிரதமர் மோடியின் கிரீஸ் பயணம் என்ன கூறுகிறது?
முன்னதாக, பெங்களூரு நகரத்தில் சட்டவிரோத ஃப்ளெக்ஸ் பேனர்களை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு, குடிமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் சிவகுமார் கோரியிருந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் டி.தேவராஜ் அர்ஸ் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மாநில காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரை அதிகாரிகள் கண்டறிந்து அகற்றியதாகவும், பேனர் வைப்பதற்கான அனுமதியை பெங்களூரு மாநகராட்சியிடம் இருந்து பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, மேலும் அதை பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையரின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.” என டி.கே.சிவக்குமாருக்கு உதவி வருவாய் அதிகாரி அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.